

பேச்சுவார்த்தையில் பங்கேற்ற என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா. படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி: சட்டப்பேரவை தேர்தலையொட்டி புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்துள்ளது. முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், பாஜகவுக்கு 14 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில், பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை காமராஜர் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் நேற்று மாலை நடந்தது. என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் அதன் தலைவரான முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் - பாஜக தரப்பில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்துக்குப் பிறகு வெளியே வந்த முதல்வர் ரங்கசாமி, ‘‘எப்போதும் நாங்கள் என்டிஏ கூட்டணியில்தான் இருக்கிறோம். இந்த தேர்தலிலும் இதை தொடர்கிறோம். தற்போது நடந்த பேச்சுவார்த்தை சுமுகமாக, திருப்திகரமாக இருக்கிறது’’ என்றார். ‘என்டிஏ கூட்டணியில் விஜய்யின் தவெக சேருகிறதா?’ என்ற கேள்விக்கு “நன்றி வணக்கம்” என கூறிச் சென்றார்.
பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறியதாவது: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசினார். பிரதமர் மோடி வழிகாட்டுதல், மேம்பாட்டு பணிகள், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்துள்ள பணிகளை முன்வைத்து தேர்தலை சந்திக்க உள்ளோம்.
புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில்செய்ய முடியாத திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் எங்கள்
கூட்டணி அரசு செய்திருக்கிறது என்று மக்களே பேசுகின்றனர். என்ஆர்காங்கிரஸ் கடந்த தேர்தலில் 16 இடங்களில் போட்டியிட்டது. பாஜக தரப்புக்கு ஒதுக்கப்பட்ட 14 இடங்களில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்டோம். கடந்த தேர்தலில் இருந்த அதே நடைமுறை இம்முறை தொடரும்.
எந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பதை ஓரிரு நாளில் இறுதி செய்வோம். பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சி என்.ஆர்.காங்கிரஸ். இதர கட்சிகளுடன் பாஜக கூட்டணிஅமைத்து ஒருங்கிணைத்து போட்டியிடுகிறது. லட்சிய ஜனநாயக கட்சியும் எங்கள் கூட்டணிக்கு வருகிறது. கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சி வருவதற்கு முதல்வர் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.
அதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை இன்னும் பேசவில்லை. கடந்த முறை அவர்கள் 4 எம்எல்ஏக்களுடன் இருந்ததால் 5 இடங்களை ஒதுக்கினோம். இம்முறை பேசி முடிவு எடுப்போம். அதிமுக மற்றும் லஜகவுக்கு பாஜக வசம் இருந்து இடங்களை ஒதுக்குவோம்.
தவெகவுடன் பேச்சுவார்த்தை ஏதும் நடக்கவில்லை. கூட்டணியில் உள்ள பாமக கடந்த முறை புதுச்சேரியில் தொகுதி கேட்கவில்லை. இம்முறையும் இதுவரை ஏதும் கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.