

தமிழகத்தில் இண்டியா கூட்டணிக்கு திமுக தலைமை வகித்தாலும் புதுச்சேரியில் காங்கிரஸ் தான் தலைமை வகித்து வந்தது. தற்போது யார் தலைமை என்பதில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் உரிமை முழக்கம் வலுத்து வருகிறது.
கடந்த 2000-மாவது ஆண்டுக்குப் பிறகு புதுச்சேரியில் திமுக ஆட்சியோ அல்லது திமுக கூட்டணியின் ஆட்சியோ அமையவில்லை. கால் நுாற்றுாண்டுக்குப் பிறகு அந்த ரெக்கார்டை உடைக்க திமுக இப்போது தீவிரமாக செயலாற்றி வருகிறது. “தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சியை நிறுவுவோம்” என்று திமுக-வின் மாநில தேர்தல் பொறுப்பாளரான ஜெகத்ரட்சகன் தமது கட்சியினரை உசுப்பேற்றிக் கொண்டே வருகிறார். இதற்கு போட்டியாக காங்கிரஸ் கட்சியும், “இம்முறை நாங்கள் 20 தொகுதிகளில் போட்டியிடுவோம்” என்று உறக்கத்தில் கேட்டாலும் விழிப்பாகச் சொல்லி வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸை தவிர்த்துவிட்டு இண்டியா கூட்டணியின் மற்ற கட்சிகளுடன் நேற்று முன்தினம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது திமுக. இதில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளுமே, “புதுச்சேரியில் இண்டியா கூட்டணிக்கு திமுக-வே தலைமை தாங்க வேண்டும்” என ஜெகத்ரட்சகனிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுவையிலும் இண்டியா கூட்டணிக்கு திமுக தலைமை தாங்க வேண்டும் என இடதுசாரிகளும் விசிக-வும் விரும்புகிறார்கள். இதை மேலிடத்துக்கு தெரிவித்துள்ளோம். ஏனெனில், புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுக 6 எம்எல்ஏ-க்களின் பலத்துடன் எதிர்க்கட்சியாக உள்ளது. காங்கிரஸுக்கு 2 எம்எல்ஏ-க்கள் மட்டுமே உள்ளனர்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும் திமுக, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில் நேரடியாக தேர்தல் பணியை செய்தது. தற்போது புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சியைக் கொண்டு வருவதற்காக, கடந்த தேர்தலில் நாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் மட்டுமல்லாது காங்கிரஸ்போட்டியிட்ட சில தொகுதிகளிலும் தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டோம்" என்றனர்.
காங்கிரஸ் தரப்பிலும் முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்எல்ஏ-க்களும் தங்கள் தொகுதிகளில் தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டனர். இருந்தாலும் தேர்தல் கூட்டணி குறித்து தலைமை என்ன முடிவெடுக்கப் போகிறது என்று தெரியாமல் கதர் பார்ட்டிகள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.