

“கல்வியில் சிறந்த தமிழகம் தற்போது கஞ்சா நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் தங்கக் கோபுரம் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜையில் நேற்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் கூறியதாவது: மடப்புரம் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில் யார் குற்றம் செய்திருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். திமுக ஆட்சியே மக்களுக்கு எதிரானதாகத் தான் உள்ளது. கல்வியில் சிறந்த தமிழகம், கம்பன் பிறந்த தமிழகம் தற்போது கஞ்சா நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது.
கத்தி, அரிவாளுடன் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் சூழல் உள்ளது. பெருமாள் அருளால் விரைவில் நல்லது நடக்கும். அதிமுக தேர்தல் அறிக்கை வரவேற்கத் தக்கது. எங்களிடம் பேசித்தான் பழனிசாமி தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். பாஜக-வும் கொள்கை அடிப்படையில் தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிடும். இருவருக்கும் பொதுவான தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும்.
பாஜக என்றுமே இந்தியை திணித்தது இல்லை. தமிழக மக்களுக்கு அனைத்து மொழியும் தெரிந்திருக்க வேண்டும் என்பது தான் பாஜக-வின் விருப்பம். மொழியை வைத்து அரசியல் செய்வது என்பது நல்ல விஷயமாக இருக்காது. வரி வசூல் அடிப்படையில் மத்திய அரசு நிதி வழங்குவது இல்லை என்பது பொய்யான குற்றச்சாட்டு. தமிழகத்தில் ரேஷன் பொருட்களை வழங்குவது மத்திய அரசு தான். இதை மறுப்பாரா ஸ்டாலின்? விருதுநகர், சிவகாசி போன்ற நகர மக்கள் அதிக வரி செலுத்துகின்றனர். அதற்காக கன்னியாகுமரி, திருநெல்வேலிக்கு நிதி ஒதுக்காமல் விட முடியுமா?
அனைத்து மாவட்டங்களிலும் கனிம வளத்தை கொள்ளையடிப்பது திமுக-வினர் தான். கனிமவளக் கொள்ளை குறித்து பட்டியல் வெளியிடத் தயார். தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கனிமவளத்தை கொள்ளையடித்துச் செல்கின்றனர். அங்கிருந்து மருத்துவ கழிவுகளை தமிழகத்துக்கு கொண்டு வருகின்றனர். இதை தனது நண்பரான கேரள முதல்வரிடம் பேசி, மு.க.ஸ்டாலின் நிறுத்தலாமே. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு அறிவித்தது என்ன? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தமிழக பட்ஜெட்டில் சிவகங்கை, திருக்கோஷ்டியூருக்கு என்ன திட்டங்களை அறிவித்தனர் என்று கேட்க முடியுமா? ரூ.7,300 கோடியை ரயில்வேக்கு ஒதுக்கியுள்ளனர். மாவட்டந்தோறும் மகளிருக்கு விடுதி அறிவித்துள்ளனர்.
செமி கண்டக்டர் ஆலைக்கு ரூ.40,000 கோடி ஒதுக்கியுள்ளனர். அதில் தமிழகத்துக்கும் பங்கு இருக்கிறது. தமிழகத்தில் ஆயுர்வேத மருத்துவம் அதிகமாக உள்ளது. அத்துறைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கியுள்ளனர். திருச்சி, தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு நிதி ஒதுக்கி உள்ளனர்” என்றார்.