“விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி தரலாம்” - முதல்வர் ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ கருத்து!

“விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி தரலாம்” - முதல்வர் ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ கருத்து!
Updated on
1 min read

புதுச்சேரி: விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி தரலாம் என திருநள்ளாறு எம்எல்ஏ பி.ஆர். சிவா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காரைக்கால் பிராந்தியத்திலுள்ள திருநள்ளாறு எம்எல்ஏ சிவா இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தார். அதில், “கடும் மழையால் காரைக்கால் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. ரேஷனில் தற்போது அரிசி தரப்பட்டாலும் வேலைக்கு செல்ல முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிவாரணம் தேவை. அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் ரூ.10 ஆயிரம் அறிவிக்க வேண்டும்.

வயலில் தண்ணீர் நின்று சம்பா பயிர் பாதிப்பு அடைந்து, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு உதவும் வகையில் நீரில் மூழ்கிய விளை நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் அறிவிக்க வேண்டும். பெரும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யவில்லை. அதை தள்ளுபடி செய்ய வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் தேவை.” என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

முதல்வரிடம் மனு தந்த பி.ஆர்.சிவா கடந்த 2016-ல் என்.ஆர்,காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்தார். கடந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸில் போட்டியிட வாய்ப்பு தராததால் சுயேட்சையாக போட்டியிட்டு வென்று எம்எல்ஏவானார். தற்போது தவெகவில் இணைய உள்ளதாகவும் தகவல் பரவி வந்தது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பி.ஆர். சிவா கூறுகையில், “விஜய் ரோடு ஷோவால் பாதிப்பு இருக்காது. ரோடு ஷோ நடத்த அனைத்து கட்சிகளும் அனுமதி கேட்கிறார்கள். அனுமதி கொடுப்பதால் பாதிப்பு என்னவென்று தெரியவில்லை.

பயத்தால் அனுமதி தராமல் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. தவறுகள் நடந்ததைக் காரணமாக வைத்து அனுமதி மறுப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது.

பொதுக்கூட்டம் போட்டால்தான் பாதிப்பு வரும். ரோடு ஷோ என்பதால் வாகனம் நகர்ந்து செல்வதால் பாதிப்பு இருக்காது. அனுமதி கொடுப்பதில் தவறில்லை.” என்றார்.

தவெகவில் இணையப்போவதாக தகவல் வந்ததே அதற்காக சொல்கிறீர்களா என்று கேட்டதற்கு, “நான் ரங்கசாமி ஆதரவாளர். வரும் தேர்தலில் அவர் எடுக்கும் முடிவை பொருத்துதான் என் முடிவை எடுப்பேன்.

அதுவரை எந்த முடிவும் எடுக்கமாட்டேன். ரோடு ஷோ நடத்த புதுச்சேரியில் அனுமதி தரலாம். கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடக்கிறது. புதுச்சேரியில் பாதுகாப்பு இருக்கிறது. பயத்தால்தான் அனுமதி தரவில்லை என நினைக்கிறார்கள். பாஜகவால்தான் ரோடு ஷோ அனுமதி மறுக்கிறார்கள் என்ற கருத்தும் இருக்கிறது. ரோடு ஷோ நடத்த அனுமதி கொடுக்கலாம். தவறில்லை. " என்றார்.

“விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி தரலாம்” - முதல்வர் ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ கருத்து!
LIVE: திருவண்ணாமலை தீபத் திருவிழா நேரலை | மலை உச்சியில் மகா தீபம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in