

புதுவையில் சீல் வைக்கப்பட்ட போலி மருந்து தொழிற்சாலை
புதுச்சேரி: புதுச்சேரியில் சீல் வைக்கப்பட்ட போலி மருத்து தொழிற்சாலையின் மருந்து குடோன் தமிழகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை மாதவரம் அடுத்த பெரியசேக்காட்டை சேர்ந்தவர் ராஜ்குமார் (40). இவர் சென்னையில் ஏபிஏ டிரக்ஸ் அண்ட் ஃபார்மலேஷன் என்ற மருந்து விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவரின் நிறுவனத்தின் பெயர் கொண்டு ‘ப்ரீகாபலின்–150’ (வலிப்பு எதிர்ப்பு மற்றும் நரம்பு வலி நிவாரணி) மாத்திரைகள் ஆவணங்கள் இன்றி இலங்கைக்கு படகில் கடத்த முயன்றபோது, ராமநாதபுரம் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் அங்கு சென்று பார்த்தபோது, பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள் தனது நிறுவனத்தின் பெயரில் தயாரான போலியானவை என்பது தெரியவந்தது. தமிழக கியூ பிரிவு போலீஸார் தகவல்படி, போலி மாத்திரைகள் புதுச்சேரியில் தயாரானதும் தெரிந்தது. விசாரணையில் புதுவை குருமாம்பேட்டில் உள்ள ‘மெடினோக் ஹெல்த்கேர்’ நிறுவனத்தில் போலி மாத்திரைகள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சோதனையில் பிடிப்பட்ட 3 லட்சம் போலி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், போலி மாத்திரைகளை தயாரித்த தொழிற்சாலை உரிமையாளர் புதுவை சண்முகாபுரத்தை சேர்ந்த பிரபாகரனும் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதனிடையே, மேட்டுப்பாளையம் போலீஸார் குருமாம்பேட் நிறுவனத்தில் சோதனை நடத்தியபோது, அந்த நிறுவனத்துக்கு வேன் ஒன்று வந்துள்ளது. அவற்றை சோதனை செய்ததில், ‘ப்ரீகாபலின்-150’ மாத்திரைகள் 6 அட்டை பெட்டிகளில் ஒன்றரை லட்சம் அளவுக்கு இருந்துள்ளன. இதன் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.
இது குறித்து வேன் ஓட்டுநரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், பூத்துறை குடோனில் இருந்து மாத்திரைகளை ஏற்றி வந்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து பூத்துறை குடோனை சோதனை செய்த போலீஸார், ‘ப்ரீகாபலின்-150’ மாத்திரை தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட மருந்துகளைக் கண்டறிந்தனர். இந்த குடோனை மெடினோக் ஹெல்த் கேர் நிறுவன உரிமையாளர் பிரபாகரன், சாமி சரோன் என்ற பெயரில் இயக்கி வருவதும் தெரியவந்தது.
பூத்துறை தமிழகப் பகுதி என்பதால், இது குறித்து சென்னையில் உள்ள மருந்து தரக்கட்டுப்பாட்டு துறை இணை இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், விழுப்புரம் மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் ஷைலஜா தலைமையிலான குழுவினர், பூத்துறையில் உள்ள ‘சாமி சரோன்’ குடோனில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், ‘ப்ரீகாபலின்-150’ மாத்திரை உள்ளிட்ட 20 வகையான மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, ”புதுச்சேரி குருமாம்பேட் மற்றும் தமிழக பகுதியான பூத்துறையில் புதுச்சேரி மற்றும் தமிழக மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய சோதனையில், இதுவரை பல கோடி மதிப்புள்ள போலி மருந்துகள், அதற்கான மூலப்பொருட்கள் கிடைத்துள்ளது" என்றனர்.