‘கொடுங்கோல் ஆட்சியை பார்க்கிறோம்’ - பாஜக மீது புதுச்சேரி காங்கிரஸ் விமர்சனம்

காங்கிரஸ் போராட்டம் 

காங்கிரஸ் போராட்டம் 

Updated on
2 min read

புதுச்சேரி: நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பேசுபவர்களை ஒடுக்கும் வகையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கொடுங்கோல் ஆட்சி நடத்தி வருவதாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி விமர்சித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர்-ஐ கண்டித்தும், பாஜக நிர்வாகிகள், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து எப்ஐஆர் பதிவு செய்ய வலியுறுத்தியும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

அண்ணா சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் கந்தகசாமி, ஷாஜகான், இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ஆனந்தபாபு, மகளிர் காங்கிரஸ் நிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில் வைத்திலிங்கம் எம்.பி பேசியது: “ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையை பேசுவதற்கு கூட அனுமதிக்காத பாஜக அரசு, ஆர்எஸ்எஸ் அரசு, புதுச்சேரியில் இருக்கும் அமைச்சர் நமச்சிவாயம் அரசு, இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது மிகக் கொடுமையான நிகழ்வு. நாட்டில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை யார் பேசினாலும் நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லக்கூடிய நிலைப்பாட்டை பாஜக எடுத்திருக்கின்றது. புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் நடந்த குற்றச்சாட்டை விசாரிக்க ஒரு எம்எல்ஏ செல்கிறார். அவர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்.

அவர் மீது உடனடியாக வழக்கை பதிவு செய்கின்றனர். ஆனால் இவர்கள் யார் சென்றாலும் எந்தவித வழக்கும் கிடையாது. ஹெல்மெட் இல்லாமல் எம்எல்ஏ ஒருவர் வருகின்றார். அவர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர். ஆனால் முதல்வரும் ஹெல்மெட் இல்லாமல் தான் போகிறார் அவர் மீது வழக்கு இல்லை.

இதுதான் இங்கு இருக்கும் பாஜக அரசின் நிலைப்பாடு. கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை பற்றி பேசுவதற்கு கூட எல்லோரும் தயங்குகக்கூடிய கொடுமையான நிகழ்வை நடத்தி இருக்கின்றார்கள். ஆதரவாக பேசும் யாராக இருந்தாலும் சிறையில் அடைப்போம். நீங்கள் யார்? ஆதரவாக பேசுவதற்கு என்று ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை மேலும் ஒடுக்கும் நிலைப்பாட்டை பாஜக எடுத்திருக்கின்றது.

இங்குள்ள பாஜக அரசும் இதே நிலைப்பாட்டைத்தான் எடுத்திருக்கின்றது. இதையெல்லாம் வைத்து பார்க்கின்றபோது மற்ற சமுதாயத்தினர் இங்கு வாழ முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது. இந்துக்கள் யார், ஒருசிலர் மட்டும் தான். மீதமுள்ளவர்கள் யாரும் இந்துக்கள் கிடையாது.

கோயிலுக்களுக்குள் விடமாட்டார்கள். பூஜை செய்ய அனுமதிக்கப்பாட்டார்கள். இதுதான் இன்றைய ஆர்எஸ்எஸ் நிலைபாடு. ராமர் கோயில் என்றார்கள், இன்று ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளை அடித்திருக்கிறார்கள். அதைப் பற்றி பேச நாடாளுமன்றத்தில் அனுமதி கிடையாது.

மாணவர்கள் மீது கொடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இதையெல்லாம் செய்துவிட்டு நாடாளுமன்றத்தில் பதில் சொல்ல சொன்னால், மத்திய உள்துறை அமைச்சர் புதுச்சேரியில் வந்து உட்கார்ந்துகொண்டு டீ சாப்பிடுகிறார். அவருக்கு பயம். நாடாளுமன்றம் போனால் கண்டிப்பாக ராஜினாமா செய்துதான் ஆக வேண்டும் என்ற பயம்.

இதுபோன்ற கொடுங்கோல் ஆட்சியை பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அதனை கண்டித்தே இப்போது ஆர்ப்ப்பாம் நடத்துகின்றோம். இது மாநிலம் தழுவிய அளவில் நடத்தப்படும். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை காப்பது தான் எங்களின் நோக்கம்.

ராகுல் காந்தியின் மீது போடப்பட்ட வழக்கை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். பாஜக, ஆர்எஸ்எஸ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று அவர் பேசினார். தொடர்ந்து வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றையும் அளித்தனர்.

<div class="paragraphs"><p>காங்கிரஸ் போராட்டம்&nbsp;</p></div>
“பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு கூடாது” - ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in