

புதுச்சேரி: புதுச்சேரியில் திமுக ஆட்சி என தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக புதுச்சேரி காங்கிரஸார் ஆவேசத்துடன் குற்றம்சாட்டுகின்றனர். இதில் திமுக தலைமை தலையிட வேண்டும் எனவும் தமிழகத்தில் திராவிட மாடல்- புதுச்சேரியில் காங்கிரஸ் மாடல் எனவும் விளக்கம் தந்துள்ளனர்.
புதுவை மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பொது செயலாளர்கள் மணவாளன், சிவசண்முகம், ரகுமான், வேல்முருகன் கண்ணன் செயலாளர்கள் மு.ப.சரவணன், ரமேஷ், செல்வநாதன்,செல்வம் யுனிவர்சல் சிவா, தங்கமணி பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், புகழேந்தி குலசேகரன் மற்றும் 36 நிர்வாகிகள் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அதில் கூறியிருப்பதாவது: புதுவை கம்பன் கலை அரங்கில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் ராஜா புதுவையில் திமுக ஆட்சி மலரும் என்று கூறியுள்ளார். இதனை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது
புதுச்சேரியில் முதன்மையான கட்சி காங்கிரஸ் ஆகும். 2001-ம் ஆண்டில் தனித்து நின்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது .சென்ற 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தொகுதிகள் திமுகவிற்கு விட்டுக் கொடுக்கப்பட்டதால் 6 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது.
2021-ல் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ் கட்சி 16 சதவிகிதம் வாக்குகளை பெற்றது. 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 29 தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி வரவேண்டும் என்று ராகுல் காந்தி கூட்டணியில் உடன்பட்டு திமுக தலைமையோடு ஒன்றிணைந்து செயல்படுகின்றார். அதேபோல் புதுவையில் காங்கிரஸ் மாடல் ஆட்சி வரவேண்டும். இந்த சூழ்நிலையில் தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் புதுவையில் வந்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றார்கள்.
புதுவை மக்கள் தேசிய எண்ணம் கொண்டவர்கள் காங்கிரஸ் கட்சி மீது பற்று உள்ளவர்கள் புதுவையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இந்தியா கூட்டணியின் முதல் குறிக்கோள் தமிழகத்திலும் புதுவையிலும் பாஜகவை வேறோடு அறுக்க வேண்டும் என்பதுதான். ஆகவே புதுவை திமுக இண்டியா கூட்டணியோடு இணைந்து செயல்பட்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும்.
மக்கள் உயிரோடு விளையாடும் ஊழல் அரசான என்ஆர் காங்கிரஸ் - பாஜகவை தூக்கி எரிய வேண்டும் என்றால் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் முதன்மை கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து வரும் தேர்தலில் திமுக பாடுபட வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இண்டியா கூட்டணியுடன் இணைந்து தேர்தல் களம் கண்டு பெரும்பான்மை பெற்று காங்கிரஸ் ஆட்சி அமையும் என்பதில் ஐயமில்லை .ஆகவே தமிழக திமுக தலைமை புதுவை அரசியலில் தலையிட்டு புதுவையில் காங்கிரஸ் கட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் இதனை இங்குள்ள திமுக தலைமைக்கு அறிவுறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.