

திருவண்ணாமலை: “உதயநிதி தன்னுடைய பொறுப்பை உணர்ந்து இன்னும் பவர்ஃபுல்லாக செயல்படுகிறார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இறங்கி அடிக்கிறார். கொள்கை எதிரிகள், “உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்” என்று புலம்புகிறார்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் இன்று வடக்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு திமுக இளைஞரணி தலைவரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். இம்மாநாட்டில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த 1.30 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “எதிரில் இருக்கும் உங்களைப் பார்க்கும்போது, ஒரு ஐம்பது ஆண்டுகள் டைம்-டிராவல் செய்து பின்னால் சென்றது போன்று எனக்கு இருக்கிறது. உங்களைப் போன்ற இளைஞனாக கிராமம் கிராமமாகத் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து, இந்த இளைஞரணியை வளர்த்தெடுத்த ஞாபகங்கள் எல்லாம் வருகிறது. எத்தனை ஞாபகங்கள்? இரவு பகல் பார்க்காமல், தூக்கம் இல்லாமல், கிராமங்கள்தோறும் கொடி ஏற்றம், திண்ணை பிரச்சாரம், நாடகம், பொதுக்கூட்டம் எனக் கழக நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம். அப்படி உழைத்து, வளர்த்த திராவிட முன்னேற்றக் கழகம், 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறோம்.
அப்படிப்பட்ட கழகத்திற்கு, புது இரத்தமாக வந்திருக்கும் உங்களைப் பார்க்கும்போது - புது மகிழ்ச்சியும், நம்பிக்கையும் பிறக்கிறது! அதுமட்டுமல்ல, உங்களுடைய எனர்ஜி எனக்கும் ‘டிரான்ஸ்பர்’ ஆகியிருக்கிறது. இந்த மாபெரும் இயக்கத்தைப் பேரறிஞர் அண்ணா தொடங்கியபோது, அவருக்கு வயது, 40. கலைஞருக்கு 25 வயதுதான். பேராசிரியர், நாவலர் என்று பலரும் அவர்களின் இருபதுகளில்தான் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் எப்படி ஃபயராக இருந்தார்கள் என்பதற்கு, ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்.
1941-இல் கலைஞர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் முதலாம் ஆண்டு நிறைவுக்கு, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனிடம் இருந்து, ஒரு வாழ்த்துப்பா வந்தது. அந்த வாழ்த்துப்பாவில் புரட்சிக்கவிஞர் எழுதிய வரிகள்தான் “கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக்கூட்டம்! கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக்கூட்டத்தை!” இந்த வரிகளைக் கேட்கும்போதே, அந்த இளைஞர்கள் எப்படி ஃபயராக இருந்திருப்பார்கள் என்று உங்களுக்குப் புரியும்! அந்த ஃபயர்பிராண்ட்-தான், நம்முடைய திமுக.
எது எதெல்லாம் இந்த தமிழ்ச் சமுதாயத்தைப் பின்னுக்கு இழுக்குமோ. எது எதெல்லாம் தமிழ்நாட்டை இருட்டிற்குள் தள்ளுமோ அது எல்லாவற்றையும் எதிர்த்து, தோற்கடித்து, புது வரலாறு படைத்தோம். சும்மா எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இங்கு எதையும் செய்துவிடவில்லை. தெருத்தெருவாக வீடு வீடாக சென்று பேசி, டீக்கடையையும் சலூனையுமே, அரசியல் மேடைகளாக மாற்றி, மக்களை எஜுகேட் செய்தோம். உலக வரலாற்றையெல்லாம் சொல்லி, நாம் ஏன் இன்னும் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம் என்று எடுத்துச் சொல்லி, மக்களுக்குள் நல்ல மாற்றத்திற்கான விதையை, சிந்தனையாக விதைத்தார்கள்.
அண்ணா பேசுகிறார்… கலைஞர் பேசுகிறார்… நாவலர் பேசுகிறார்… பேராசிரியர் பேசுகிறார் என்று சொன்னால், மக்களும் குடும்பம் குடும்பமாக வந்து அவர்கள் பேசுவதைக் கேட்டார்கள். அவர்கள் பேச்சில் சொன்னதையெல்லாம், மக்கள் அவரவர்களின் ஊரில் எடுத்துச் சொன்னார்கள். திராவிட இன உணர்வை வளர்த்தார்கள். தமிழை நசுக்க வந்த இந்தி ஆதிக்கத்தை விரட்டினார்கள்.
இப்போது அந்த பணியைத் தம்பி உதயநிதியிடமும், உங்களிடமும் ஒப்படைத்திருக்கிறோம். அவரும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து இன்னும் பவர்ஃபுல்லாக செயல்படுகிறார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இறங்கி அடிக்கிறார். கொள்கை எதிரிகள், “உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்” என்று புலம்புகிறார்கள்.
அந்த அளவிற்குக் கொள்கையில் உறுதியாக இருக்கிறார். கழகத்திற்கு எது தேவை என்று, உணர்ந்து செயல்படுகிறார் உதயநிதி. முதலில், அணியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று லட்சக்கணக்கான இளைஞர்களைக் கழகத்தில் சேர்த்தார். அடுத்து, அவர்களை கொள்கை ரீதியாக ஸ்டாராங் ஆக்க வேண்டும் என்று பாசறைக் கூட்டங்கள் நடத்தினார். அடுத்து, நம்முடைய கொள்கைகளை இன்றைக்கு இருக்கும் தலைமுறையினரும் புரிந்துகொள்ள, புது பேச்சாளர்கள் அவசியம் என்று உணர்ந்து, ஃபர்ஸ்ட் செட்டில் இருநூறு பேரை உருவாக்கியிருக்கிறார். அவர்களின் பேச்சையெல்லாம், கழக மேடைகளில் கேட்கும்போது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்போது நம்முடைய தோளில், தமிழ்நாட்டையும், தமிழ்மொழியையும் காக்க வேண்டிய கடமை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவையும் நாட்டின் பன்மைத்துவத்தையும் காக்க வேண்டிய கடமை இருக்கிறது. இந்தியாவிலேயே பாஜகவுக்கு எதிராக கருத்தியல் போர் செய்துகொண்டு இருக்கும் ஒரே மாநிலக் கட்சி, திமுகதான். அவர்களால் வெற்றி கொள்ள முடியாதது, நம் தமிழ்நாட்டை மட்டும்தான். அதனால்தான் அமித்ஷா போன்றோருக்கு நம் மீது எரிச்சல். அண்மையில் கூட, என்ன பேசினார்? பீகாரை ஜெயித்துவிட்டோம், “அடுத்த டார்கெட் தமிழ்நாடுதான்” என்று சொல்கிறார்!
அமித்ஷா அவர்களே. நீங்கள் இல்லை, உங்கள் சங்கிப் படையையே அழைத்துக்கொண்டு வந்தாலும், உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது. இது தமிழ்நாடு. இது தமிழ்நாடு! எங்களின் கேரக்டரையே புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்களே. அன்புடன் வந்தால், அரவணைப்போம். ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம். எதிர்த்து நிற்போம். உங்களை ஜெயித்துக் காண்பிப்போம்.
அரசியலில் சொகுசு எதிர்பார்க்காதீர்கள். இங்கு கடுமையாக உழைப்பவர்களுக்குத்தான் இடம் கிடைக்கும். அந்த இடம், கட்சிப் பொறுப்பில் மட்டுமல்ல; மக்கள் மனதிலும் நிரந்தரமாக இருக்கும். பேரறிஞர் அண்ணா , கலைஞரின் உழைப்பை பாராட்டினார். கலைஞர் என்னைப் பற்றி சொல்லும்போது “உழைப்பு… உழைப்பு… உழைப்பு” என்றுதான் சொல்வார். இப்போது நானும் தம்பி உதயநிதி அவர்களின் உழைப்பைப் பார்க்கிறேன். அதே உழைப்பைத்தான் உங்களிடமும் எதிர்பார்க்கிறேன். அந்த உழைப்புக்கு இளைஞரணிப் படை தயாரா?
கடந்தகால ஆட்சியாளர்கள், செய்த தவறுகளை, குற்றங்களை, துரோகங்களை மக்களுக்கு நினைவுபடுத்துங்கள். அவர்கள் மீண்டும் வந்தால், தமிழ்நாடு என்னென்ன ஆபத்துகளைச் சந்திக்கும் என்று மக்களிடம் சொல்லுங்கள். நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்குத் தமிழ்நாட்டை முன்னேற்றியிருக்கும், நம்முடைய திட்டங்களைப் பற்றி எடுத்துச்சொல்லுங்கள். நான் உறுதியோடு சொல்கிறேன், நாட்டில், ஏன் உலகத்திலேயே எந்த ஆட்சியும் நாம் செய்திருக்கும் அளவிற்கு முத்திரைத் திட்டங்களைச் செய்திருக்க மாட்டார்கள்.
நீங்களே பார்த்திருப்பீர்கள்… நம்முடைய அரசின் திட்டங்களால் பயனடைபவர்களின் பேட்டிகளை, பல்வேறு ஊடகங்கள் வெளியிடுகிறார்கள். அப்படி, பேட்டி அளித்த ஒரு தாய் பேசினார்கள். தன்னுடைய பிள்ளைகள் பணம் அனுப்பவில்லை என்றாலும், தனக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை வாங்க, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் உதவியாக இருக்கிறது என்று சுயமரியாதை உணர்வுடன் பேசினார்கள்.
2026 தேர்தலில், மக்கள் முன்னால் இருக்கும் கேள்வி என்ன என்றால், “இன்னும் ஐம்பது ஆண்டுகள் முன்னோக்கி நடைபோட போகிறோமா? இல்லை. ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுக்க முயற்சி செய்பவர்களுக்கு அடிபணியப் போகிறோமா?” அந்தக் கேள்விக்கு மக்கள் அளிக்கப் போகும் விடை: “திராவிட மாடல் ஆட்சி 2.0” அதற்கு நீங்கள் எல்லோரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
ஏன் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலத்தில்தான், தமிழ்நாட்டின் எதிர்காலம், தமிழினத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. அந்த எதிர்காலம், வளம் நிறைந்ததாக, ஒளி நிறைந்ததாக தமிழ்நாடு நம்பர் ஒன் என்று சிங்கநடை போடுவதாக அமைய வேண்டும். நீங்கள்தான் திராவிட மாடல் 2.0 அடித்தளமாக, இருக்க வேண்டும்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.