

காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்
புதுச்சேரி: சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததால், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக, கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, புதுவையில் இண்டியா கூட்டணியில் யார் தலைமை வகிப்பது என தொடங்கி காங்கிரஸ் - திமுக இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இரு கட்சிகளுக்கும் இடையே நல்ல உடன்பாடு ஏற்படாமலேயே, கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. கூட்டணி ஒப்பந்தத்தை மீறி, திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட்ட இடங்களில் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்களை நிறுத்தியது. இது மேலும் அதிருப்திக்கு ஆளாக்கி, தேர்தல் முடிவில் எதிரொலித்தது.
இவ்வாறு கூட்டணி ஒப்பந்தத்தை மீறி, கூட்டணி கட்சிகளின் தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியதை ‘நட்பு போட்டி’ என்ற வார்த்தையை பயன்படுத்தி காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இவ்வாறான நட்பு போட்டியில் ஈடுபட்டு, காங்கிரஸ் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 22 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் மட்டுமே வென்று படுதோல்வி அடைந்தது. குறிப்பாக, தற்போது புதுச்சேரியின் மக்களவை உறுப்பினராக இருக்கும் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து போட்டியிட்டார்.
அந்தத் தொகுதியில் போட்டியிட இண்டியா கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் அனைத்து வேலைகளையும் செய்த நிலையில், வைத்திலிங்கம் இவ்வாறு போட்டியிடுவதற்கு கடும் விமர்சனம் எழுந்தது. அவர், தேர்தலில் தோற்று, நான்காம் இடத்தை பிடித்தார். டெபாசிட் கூட வாங்கவில்லை. பிற தொகுதிகளிலும் ஏற்பட்ட தோல்வியால், புதுச்சேரி காங்கிரஸில் வைத்திலிங்கத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.
‘வைத்திலிங்கம் மாநிலத் தலைவர் பதவியை வகிக்க கூடாது. விலக வேண்டும்’ என்று கூறி புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பு ஏற்று, மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி எம்.பி. ஆகியோருக்கு வைத்திலிங்கம் நேற்று கடிதம் அனுப்பியுள்ளார்.