

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி: புதுச்சேரியில் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினவிழா இன்று கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது. குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குநர் சத்தியமூர்த்தி வரவேற்றார். முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு தன்னார்வல நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
விழாவில் முதல்வர் பேசியது: “நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கைகள் மற்றும் குறைகளை அரசு விரைவாக தீர்க்கும். நுகர்வோருக்கு பாதுகாப்பு ஏற்படும் நிலையில் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். நமது அரசு பொறுப்பேற்ற பிறகு குடிமை பொருள் வழங்கல் துறையின் மூலமாக மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
அரிசி, கோதுமை போடுகிறோம். ‘சத்துணவாக கேழ்வரகு கொடுத்தால் நன்றாக இருக்கும் ’என்று மக்கள் கேட்டார்கள். இதனால் ஒரு கிலோ கேழ்வரகு மாவு கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். நம்முடைய அரசானது, மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு. நுகர்வோர் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. சிறிய பொருளை வாங்கினால் கூட பார்த்து வாங்க வேண்டும். குறைகள் இருந்தால், அதனை உடனே நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநில மற்றும் மாவட்ட ஆணையத்துக்குதிற்கு தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும். உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால், அதையும் அரசு சரி செய்து கொடுக்கும். நுகர்வோர் ஆணையத்துக்கான கட்டிடம் சரி செய்யப்பட்டுள்ளது. அந்த கட்டிடம் தை மாதத்தில் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் முத்துவேல் பேசும்போது, “புதுச்சேரி மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் ஆணையங்கள் தற்போது ஒரே நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வருவதால், நீதிமன்ற செயல்பாடுகள் அனைத்து நாட்களிலும் நடத்த முடியாத சூழல் உள்ளது. அதனால், மத்திய, மாநில அரசு நிதியின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அதனை முதல்வர் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். புதுச்சேரியில் 1988-ல் மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் ஆணையங்கள் உருவாக்கப்பட்டன.
மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் 37 ஆண்டுகளில் 3,818 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 3,356 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2023-ல் மாவட்ட ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர் நியனம் செய்த பிறகு 515 வழக்குகளை கையான்டு தீர்த்து வைத்துள்ளோம்” என தெரிவித்தார்.
மாநில நுகர்வோர் ஆணைய தலைவர் சுந்தரவடிவேலு, மாவட்ட நுகர்வோர் ஆணைய உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் மற்றும் துறை அதிகாரிகள், நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். துணை இயக்குநர் சாரங்கபாணி நன்றி கூறினார்.