

புதுச்சேரி: புதுச்சேரியில் பொங்கல் பரிசுத்தொகை ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக வரவு வைக்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல, புதுவையிலும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.
புதுவையிலும் ரொக்கத் தொகை வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து, பொங்கல் பரிசுத்தொகை தொடர்பாக துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதனிடம் நேற்று முன்தினம் முதல்வர் ஆலோசனை நடத்தி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் தர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
மேலும், அமைச்சர்கள், அதிகாரிகளிடம் ஆலோசித்தார். தொடர்ந்து, ரூ.3,500 ரொக்கம் வழங்க முடிவு செய்யப்பட்டு, ஆளுநர் மாளிகைக்கு நேற்று முன்தினம் இரவு கோப்பு அனுப்பப்பட்டது.
ஆளுநர் அனுமதி அளித்ததன் அடிப்படையில், முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 5 பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இதுதவிர, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ. 3 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தொகை உடனடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
நிதித் துறைச் செயலர் கிருஷ்ண மோகன் உப்பு வெளியிட்டிருந்த உத்தரவில் “புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் மானியமாக ரூ.3 ஆயிரம் தர துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
பயனாளி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தும் குடிமைப்பொருள் வழங்கல் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து, பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுதொகை ரூ. 3 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மொத்தம் 3 லட்சத்து 69 ஆயிரத்து 461 ரேஷன் கார்டுகள் உள்ளன. புதுவையில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 386 குடும்பத்தினர், காரைக்காலில் 60 ஆயிரத்து 225, மாஹேயில் 7,981, ஏனாமில் 15,498 என மொத்தம் 3 லட்சத்து 47 ஆயிரத்து 90 குடும்பத்தினர் பயனடைவர். இதன் மூலம் அரசுக்கு ரூ.104 கோடியே 12 லட்சத்து 70 ஆயிரம் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.