மகரஜோதி திருவிழாவை முன்னிட்டு சபரிமலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த சந்நிதான காவல் துறை சிறப்பு அதிகாரி சுஜித்தாஸ்.
சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்: ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம்
குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரஜோதி பூஜை இன்று (டிச. 14) கோலாகலமாக நடைபெற உள்ளது. மகரஜோதியை முன்னிட்டு ஐயப்ப சுவாமிக்கு இன்று பாரம்பரிய ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற உள்ளன.
இதற்கான திருவாபரணங்கள் பந்தளத்தில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டன. இந்த ஊர்வலம் லாகா வனத்துறை சத்திரம், பிலாப்பள்ளி, அட்டதோடு, வலியான வட்டம், நீலிமலையை கடந்து சரங்குத்தி வழியே இன்று மாலை 5.30 மணிக்கு சந்நிதானத்தை வந்தடையும்.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்க உள்ளனர். பின்பு மங்கல வாத்தியங்கள் முழங்க 18-ம் படி வழியே திரு ஆபரணப்பெட்டி கொண்டு செல்லப்பட்டு மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். தொடர்ந்து, பொன்னம்பலமேட்டில் தெரியும் ஜோதியை பக்தர்கள் தரிசிப்பர். இதற்காக சந்நிதானத்தில் 14 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளன.
இதேபோல, வண்டிப்பெரியாறு, புல்மேடு, பஞ்சாலிமேடு, சத்திரம், பருந்தும்பாறை, அய்யன்மலை, பஞ்சுபாறை, இலவுங்கல், அட்டத்தோடு, நீலிமலை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தபடி பொன்னம்பலமேட்டில் தெரியும் ஜோதியை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வியூ பாயின்டுகளில் மட்டும் பக்தர்கள் மகரஜோதியை தரிசிக்கலாம்.
மகரஜோதியை ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பிட்ட நிமிடங்கள் வரையே தரிசனம் செய்ய முடியும் என்பதால், பக்தர்கள் வனப்பகுதிகளில் முகாமிட்டு வருகின்றனர். இதையொட்டி காவல் மற்றும் வனத் துறையினர் பலத்த பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக மலைப் பகுதிகளில் நேற்று அதிகாரிகள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.
புல்மேட்டில் கட்டுப்பாடு:
இரவு நேரத்தில் வன விலங்குகள் நடமாட்டத்தை கருத்தில்கொண்டு, புல்மேட்டில் மகரஜோதியை தரிசித்த பிறகு தொடர்ந்து இந்த வழித்தடத்தில் சந்நிதானம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
புல்மேட்டில் இருந்து சத்திரம் அல்லது வல்லக்கடவு வழியாகச் சென்று, அதன் பிறகே சந்நிதானத்துக்கு செல்ல வேண்டும் என்று வனத் துறை வலியுறுத்தியுள்ளது. சபரிமலையின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
