‘விஜய்யை தூக்கிப் பிடித்தால் தான் காங். கதை ஓடும்’ - புதுச்சேரி பாஜக விமர்சனம்

‘விஜய்யை தூக்கிப் பிடித்தால் தான் காங். கதை ஓடும்’ - புதுச்சேரி பாஜக விமர்சனம்
Updated on
1 min read

புதுச்சேரி: விஜய்யை தூக்கிப் பிடித்தால் தான் அவர்களின் கதை ஓடும் என களத்தில் இறங்கி உள்ளதாக காங்கிரஸை பாஜக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக பாஜகவின் புதுச்சேரி மாநில தலைவர் வி.பி. ராமலிங்கம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “தட்டாஞ்சாவடி தொகுதியில் பாஜக சார்பில் 6 தலைவர்கள் தலைமையில் 5 வார்டுகள் பிரித்து, 31 பூத்துகளிலும் வாக்கு கேட்க சிறப்பு ஏற்பாடு செய்துள்ளோம்.

பாஜக கடுமையாக உழைத்து 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் என்டிஏ கூட்டணி வேட்பாளர் அசோக் ஆனந்தனை வெற்றிபெற செய்வோம். அவர் தொகுதிக்கு நல்ல சேவையை செய்துள்ளார் என்பதை மக்கள் அறிவார்கள். தேர்தல் பிரச்சாரத்துக்கு முக்கிய தலைவர்கள் வருவது குறித்து இன்னும் முடிவாகவில்லை.

ராகுல் காந்தியின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு, அவரை முன்னிறுத்தினால் வெற்றிபெற முடியாது என்று தெரிந்து கொண்டுள்ளனர். ராகுல் காந்தி தலைமையில் 100-வது தோல்வியை நோக்கி காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. விஜய்யை தூக்கிப்பிடித்தால் தான் கதை ஓடும் என்று நம்பி களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

காங்கிரஸின் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி போட்டியிட்ட போது எவ்வளது வாக்குகள் வாங்கினார். எந்த இடத்துக்கு அவர் சென்றார் என்பது அனைவருக்கும் தெரியும். காங்கிரஸின் படம் இப்போது எடுபடாது. சென்ற முறை இரண்டு தொகுதிகளிலும், இம்முறை ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

முதல்வர் ரங்கசாமி சொன்னதுபோல் எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியே இருக்காது. அதனால் விஜய்யை பிடித்துக்கொண்டு வந்தால் மட்டுமே நம்மால் வெற்றிபெற முடியும் என்றுள்ளனர். அதாவது சட்டை அவருடையது, மாப்பிள்ளை இவருடையது என்ற நிலையில் தவெக வேட்பாளராக இருந்தவரை காங்கிரஸ் கட்சியில் நிற்க வைத்துள்ளனர்.

விஜய் தான் அடுத்த பிரதமர் என்பதை சொல்வதை பார்க்கும்போது காங்கிரஸ் எதுவும் செய்வார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். காங்கிரஸை புதுச்சேரி மக்கள் புறந்தள்ளியுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

‘விஜய்யை தூக்கிப் பிடித்தால் தான் காங். கதை ஓடும்’ - புதுச்சேரி பாஜக விமர்சனம்
“ஜெம் வீரமணி வழக்கில் முந்தைய திமுக அரசு செய்தது துரோகம்” - சீமான் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in