

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 12-ம் தேதி கூடுகிறது என்று பேரவைத் தலைவர் செல்வம் அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “15-வது புதுச்சேரி சட்டப்பேரவையின் 6-வது கூட்டத் தொடர் கடந்தாண்டு மார்ச் 10-ம் தேதி அன்று கூட்டப்பட்டு, 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கிய இக்கூட்டத் தொடர் 13 நாட்கள் நடைபெற்று பின்னர் காலவறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதன் 2-ம் பகுதி கடந்த செப்டம்பர் 18-ம் தேதி அன்று கூட்டப்பட்டு பேரவையின் அனைத்து அலுவல்களும் அன்றைய தினத்திலேயே நிறைவேற்றப்பட்டு மீண்டும் காலவறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 6-வது கூட்டத்தொடரின் 3-வது பகுதி வரும் 12-ம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை வளகத்தில் உள்ள பேரவைக் கூட்டத்தில் மீண்டும் கூட்டப்படும். அரசின் அன்றைய தினத்தில் 2026-27-ம் நிதி ஆண்டுக்கான முன்னளி மானிய சட்டமுன்வரைவு (இடைக்கால பட்ஜெட்) பேரவையில் முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்டு, பேரவையின் கருதுகை செய்யப்படும்.
பேரவையின் முன்வைக்க வேண்டிய விதிகள் மற்றும் ஏடுகள் ஏதேனும் இருந்தால், அவற்றையும் அன்றைய தினம் வைக்க அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்படும். மேலும், 2025-2026 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கும் சட்டப்பேரவையில் ஒப்புதல் கோரப்படும். சட்டப்பேரவையை நீண்ட நாட்கள் நடத்த வேண்டும் என்பது எங்களின் ஆசையாக இருக்கிறது. இருப்பினும் சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் குழு கூடிதான் எத்தனை நாட்கள் சட்டப்பேரவையை நடத்துவது என்று முடிவு செய்யும்” என்றார்.
பிரதமர் மோடி வருகை:
மேலும் அவர், “அரசு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திரமோடி வரும் 16-ம் தேதி புதுச்சேரி வரவுள்ளார். அரசியல் நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை. முழுக்க அரசு நிகழ்ச்சிக்காக மட்டுமே வருகிறார். அரசியல் கூட்டமும் அன்றைக்கு கிடையாது.
‘பெஸ்ட் புதுச்சேரி’ என்று பிரதமர் கூறியிருந்தார். அதனை செயல்படுத்துவதற்காக பிரதமர் வருகை தருகிறார். அன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரான முதல்வர் ரங்கசாமி தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிரதமர் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். புதுச்சேரிக்கு தேவையான அத்தனை உதவிகளையும் பிரதமர் செய்துள்ளார். அதனை முதல்வர் ரங்கசாமி விரிவாக சொல்வார், என்றார்.
அப்போது, ‘அரசு அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை கொடுப்போம் என்றனர். ஆனால் 2 ஆயிரம் பேருக்குத்தான் வேலை கொடுத்துள்ளனர் என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனரே’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “தவறான குற்றச்சாட்டை சொல்கின்றனர். 5 ஆயிரத்துக்கும் மேல் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அனைத்தும் நேர்மையான முறையில் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளது. எந்த அரசாலும் செய்ய முடியாத சாதனையை இந்த அரசு செய்திருக்கிறது. வரும் மார்ச் மாதத்தில் ஆயிரம் வேலை வாய்ப்புக்கான தேர்வு நடைபெறும் என்று அறிவித்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்பட்டு, பிரதமர் கூறிய ‘பெஸ்ட் புதுச்சேரி’யை உருவாக்கி இருக்கிறோம். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்துள்ளார். இந்தியா 2047-ல் வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி நகரும் வகையில் பட்ஜெட்டில் கூறியுள்ளார். நடப்பாண்டுக்கான மூலதன செலவை 10 சதவீதம் உயர்த்தி வழங்கியிருக்கிறார். ரூ.12.30 லட்சம் கோடியாக உயர்த்தி வழங்கியுள்ளார்.
புதுச்சேரிக்கு மத்திய அரசு நடப்பாண்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.3,157 கோடி. இது சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட ரூ.86 கோடி கூடுதல் நிதியை வழங்கியுள்ளது. இதுபோல் புதுச்சேரி மாநிலத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. அனைத்து தரப்பு மக்களாலும் மத்திய அரசின் பட்ஜெட் போற்றப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர், நிதியமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.
‘அப்போது, 2021-ல் இருந்து புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்டப்படும் என்று கூறி வரும் நிலையில் 5 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதே!’ என்று கேட்டபோது, “புதுச்சேரி சட்டப்பேரவைக்கான புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்கான ஒப்புதல் அளிக்குமாறும் அதைத் தொடங்கி வைக்குமாறும் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். சட்டப்பேரவைக்குப் புதிய கட்டிடத்தை வேறு ஓர் இடத்தில் கட்டுவதற்கான திட்டப் பணிகள் எல்லாவற்றையும் முடித்து தயார் நிலையில் வைத்திருக்கிறோம்.
இத்திட்டம் ரூ.657 கோடியில் தீட்டப்பட்டுள்ளது. இதற்கான நிதியை மத்திய அரசு கடனாக வாங்கிக் கொள்ளுமாறும் 50 ஆண்டுகளுக்குப் பிறகுத் திருப்பிக் கொடுத்தால் போதும் என்றும் அரை பைசா வட்டியில் இந்தக் கடனைப் பெற்றுக் கொள்ளுமாறு மத்திய அரசு 2025 டிசம்பர் மாதமே ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும்போது இந்தத் திட்டத்தையும் தொடங்கி வைக்குமாறும் அதற்கான அடிக்கல் நாட்டுமாறு பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.