

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்
புதுச்சேரி: "பொங்கல் தொகுப்பு நிதியாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். புதுவையில் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ரூ.13 ஆயிரம் வழங்க வேண்டும்" என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: போலி மருந்து விற்றதற்காக விற்பனையை நிறுத்த உத்தரவிடப்பட்ட கடைகளில் விற்பனை நடக்கிறதா என சோதனை செய்ய வேண்டும். புதுச்சேரி மாநிலத்திலுள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் விநியோகிக்கப்படும் மருந்து தரமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
அதேபோல் மருத்துவமனைகளில் விநியோகிக்கப்படும் மருந்துகள் மற்றும் ஆப்ரேஷன் தியேட்டரில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமானதா என்பதனை அறிய வேண்டும். இதய நோயாளிகளுக்கு வைக்கப்படும் ஸ்டெண்ட் தரமானதா என்பதனை இதுவரை சுகாதாரத்துறை ஆய்வு செய்யவில்லை, குறைந்த பட்சம் பத்தாயிரம் முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை ஸ்டெண்ட் கிடைக்கிறது. அப்படி வைக்கப்பட்ட ஸ்டெண்ட் தரமானதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
சுகாதாரத்துறை ஒரு குழு அமைத்து மருத்துவமனைகளில் இருக்கும் மருந்துகளின் தரத்தை கண்டறிய வேண்டும். கலால் துறையில் பறக்கும் படைகள் உள்ளது போன்று மருத்துவத் துறையிலும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை கொண்டு குழு அமைக்க வேண்டும்.
புதுச்சேரியில் இருந்து இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தப்படுவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகிறார். அப்படி என்றால் அதற்கான ஆதாரங்கள் அவர் வைத்திருப்பார். எனவே சிபிஐ மற்றும் என்ஐஏ அதிகாரிகள் ஆதாரங்களை கேட்டு பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொங்கல் தொகுப்பு நிதியாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். புதுவையில் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ரூ.13 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.