

பொன்னேரி வட்டத்துக்கு உட்பட்ட தத்தை மஞ்சி கிராமத்தில் கடந்த 2 வாரங்களாக விட்டு விட்டு குடிநீர் விநியோகிக்கப் படுவதால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அவ்வப்போது விநியோகிக்கப்படும் குடிநீரும் கழிவுநீருடன் கலந்து மஞ்சள் நிறத்தில் வரு வதால் அதனை பயன்படுத்துபவர்களுக்கு வயிற்றுப் போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் ஆட் சியர் வரை புகார் மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் நேற்று கிராம மக்கள் தடையற்ற, சுகாதாரமான குடிநீர் வழங்க வலியுறுத்தி மீஞ்சூர் - புலிகட் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த 5 அரசு பேருந்துகளையும் சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரனை முற்றுகையிட்டு அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து இரண்டு வாரத்தில் புதிதாக குடிநீர் மோட்டார் அமைத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள், இதே நிலை தொடர்ந்தால் சாலை மறியல், தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்தனர். இந்த திடீர் போராட்டத்தால் பழவேற்காடு- மீஞ்சூர் இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.