

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. சட்டப்பேரவையில் மாநில அந்தஸ்து கோரி 14 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் சுயேச்சை எம்எல்ஏ நேரு தலைமையில் பொதுநல அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் புதுச்சேரி வருகையையொட்டி, அவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அண்ணா சிலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நேரு எம்எல்ஏ தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காமல் தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய அரசை கண்டித்தும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநில அந்தஸ்து வழங்க வழிவகை செய்ய வலியுறுத்தியும் கோரிக்கை வைத்து கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் நேரு எம்எல்ஏ பேசியது: “பிரெஞ்சு அரசிடம் இருந்து விடுதலை பெற்று இந்திய அரசுடன் இணைந்த பிறகு புதுச்சேரி மாண்பு, மரியாதை, தனித்தன்மையை இழந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்ந்தெடுத்த அரசுக்கு அதிகாரம் இல்லாததால் வளர்ச்சி குன்றி பின்னடைவை சந்தித்துள்ளது.
துணைநிலை ஆளுநர் அலுவலகம், தலைமை செயலகம், சட்டப்பேரவை என 3 அதிகார மையங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடாக செயல்படுகிறது. இதனால் மக்கள் பிரதிநிதிகளுக்கு அங்கீகாரம் இல்லை. தேர்தல் முடிந்து அமைச்சர்கள் பொறுப்பேற்ற பிறகும் இலாகா ஒப்புதல் கிடைக்காததால் 3 மாதம் சட்டப்பேரவை முடங்கி கிடந்தது.
சட்டப்பேரவை தலைவர் தேர்தல் இதுவரை நடக்கவில்லை. இந்திய சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத கேலிக்கூத்து புதுச்சேரியில் நடக்கிறது. இப்படியே புதுச்சேரி யூனியன் பிரதேசமாக மத்திய அரசின் கட்டுபாட்டின் கீழ் இருப்பதால் புதுச்சேரியின் வளர்ச்சி மற்ற மாநிலங்களை விட 25 ஆண்டுகாலம் பின்தங்கியுள்ளது.
ஏர்போர்ட் விரிவாக்கம் திட்டம், கரசூர், சேதராப்பட்டு பொருளாதார மண்டல திட்டம், சென்னை – பாண்டி – கடலூர் கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் கிடப்பில் கிடக்கிறது. குடிநீர் மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, சாலை போக்குவரத்து மேலாண்மை, மருத்துவ கட்டமைப்பு படுமோசமாக உள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை.
இதற்கெல்லாம் தீர்வு மாநில அந்தஸ்துதான். இதை பெற மாநிலம் தழுவிய மக்கள் போராட்டம் விரைவில் தொடங்கும்” என்றார். ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி பெறாததால் போலீஸார் எம்எல்ஏவை தவிர்த்து மற்றவர்களை அங்கிருந்து வேனில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.