“கர்நாடக அமைச்சரவையில் நிச்சயம் ஒரு பெண் இடம்பெறுவார்” - முதல்வர் சிவகுமார்

“கர்நாடக அமைச்சரவையில் நிச்சயம் ஒரு பெண் இடம்பெறுவார்” - முதல்வர் சிவகுமார்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக அமைச்சரவையில் பெண் அமைச்சர்கள் இல்லாதது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சித்திருந்த நிலையில், நிச்சயம் ஒரு பெண் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், “கர்நாடக அமைச்சரவையில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலின்போது நாங்கள் பெண்களுக்கு எத்தனை இடங்களை ஒதுக்கினோம் என்பது உங்களுக்கு (செய்தியாளர்களுக்கு) நன்கு தெரியும்.

கர்நாடக அமைச்சரவையில் பெண் அமைச்சர் இல்லை என்ற நிலையை நாங்கள் நிச்சயம் மாற்றுவோம். காங்கிரஸ் கட்சியைப் பற்றி கிரண் ரிஜிஜு கவலைப்படத் தேவையில்லை.

பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை முன்னெடுத்ததும், அதை நிறைவேற்றியதும் காங்கிரஸ் கட்சிதான். பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் எங்கள் கட்சி நம்பிக்கை கொண்டிருக்கிறது. நிச்சயமாக கர்நாடக அமைச்சரவையில் ஒரு பெண் இடம்பெறுவார். பெண்களுக்கு நாங்கள் அதிக வலிமையை அளிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

பின்னணி:

பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து ராகுல் காந்தி நேற்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அவரது இந்த வீடியோவை டேக் செய்து மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று காலை வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இது காங்கிரஸ் கட்சியிடமிருந்து வரும் ஒரு நேர்மறையான செய்தியாகத் தெரிகிறது.

பெண்கள் விஷயத்தில் ராகுல் காந்தியின் மனநிலையில் ஒரு தெளிவான மாற்றம் தெரிகிறது. இனி, காங்கிரஸ் கட்சி மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிபந்தனையின்றி ஆதரிக்கும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

கிரண் ரிஜிஜுவின் இந்தப் பதிவுக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “மகளிர் இடஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அது ஏன் இன்னும் அமல்படுத்தப்படவில்லை? இப்போது அதை ஏன் தேவையற்ற வகையில் தொகுதி மறுவரையறையுடன் இணைக்க விரும்புகிறீர்கள்?” என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த கிரண் ரிஜிஜு, 2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த தொகுதி மறுவரையறை அவசியம் என்றும், எனவே, இதை ஆதரிக்க காங்கிரஸ் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், “கர்நாடகாவில் டி.கே.சிவக்குமார் தலைமையிலான அமைச்சரவையில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை. இது 33% மகளிர் இடஒதுக்கீடு குறித்த காங்கிரஸின் நிலைப்பாட்டின் மீது தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது” என்று கிரண் ரிஜிஜு விமர்சித்திருந்தார். கிரண் ரிஜிஜுவின் இந்த விமர்சனத்துக்கு டி.கே. சிவக்குமார் பதில் அளித்துள்ளார்.

“கர்நாடக அமைச்சரவையில் நிச்சயம் ஒரு பெண் இடம்பெறுவார்” - முதல்வர் சிவகுமார்
“நாட்டின் சுதந்திரத்துக்காக பாஜக, ஆர்எஸ்எஸ் எதுவும் செய்யவில்லை” - கார்கே

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in