

சென்னை: சாலையில் நடந்து சென்ற இளம் பெண்களிடம் தவறாக நடந்த நேபாளத்தைச் சேர்ந்த 3 பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
புரசைவாக்கத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அப்பெண், உறவுக்கார பெண்ணை அழைத்துக் கொண்டு புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மருந்தகத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மது போதையில் வந்த இளைஞர்கள் 3 பேர் இளம் பெண்களிடம் பேச்சு கொடுத்து கிண்டலடித்துள்ளனர். மேலும் அப்பெண்களிடம் ஆபாசமாக சைகை காட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்கள் உடனடியாக அருகில் நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநரிடம் இது தொடர்பாக தெரிவித்தனர். அந்த ஆட்டோ ஓட்டுநர் பெண்கள் இருவரையும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அந்த 3 பேரையும் பிடிக்கச் சென்றார்.
சிறிது தூரத்தில் இளம் பெண்கள் 3 பேரையும் அடையாளம் காட்டவே, ஆட்டோ ஓட்டுநர் அவர்களை மடக்கினார். நடந்ததை அறிந்த அந்த பகுதியில் நின்றவர்கள், பெண்களிடம் தவறாக நடந்த அந்த 3 பேருக்கும் தர்ம அடி கொடுத்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸாரின் விசாரணையில், பிடிபட்டவர்கள் நேபாளத்தைச் சேர்ந்த ஜன்சல் (22) மற்றும் அதே நாட்டைச் சேர்ந்த 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
அவர்கள் அதே பகுதியில் உள்ள ஓட்டலில் பணியாற்றி வருவதும், பணி முடிந்ததும் மது அருந்திவிட்டு, சாலையில் நடந்து சென்ற இளம் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.