

கோப்புப் படம்
மதுராந்தகம்: இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் வாக்காளர்களை அழைத்து வருவதற்கு வாகனம் ஏற்பாடு செய்வது தண்டனைக்குரிய குற்றம் என மதுராந்தகம் தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை: மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பணிகளுக்காக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் உரிய முன் அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். அனுமதியின்றி எந்தவொரு கூடுதல் வாகனத்தையும் தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தக்கூடாது.
வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கோ அல்லது வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குச்சாவடியிலிருந்து அழைத்துச் செல்வதற்கோ வேட்பாளர் அல்லது அவரது முகவர் எந்தவொரு வாகனத்தையும் வாடகைக்கு எடுக்கவோ, வாங்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. வாக்காளர்களின் போக்குவரத்துக்காக வாகனங்களை ஏற்பாடு செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய தேர்தல் முறைகேடாகும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலிருந்தும் 100 மீட்டர் தொலைவுக்கு அப்பால் மட்டுமே வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகங்களை அமைக்க வேண்டும். அலுவலக வளாகம் அல்லது அதன் அருகில் தேவையற்ற கூட்டத்தை கூட்டி இடையூறு ஏற்படுத்த கூடாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.