

தஞ்சாவூர்: மேகேதாட்டு அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை எரித்து, தஞ்சாவூரில் நேற்று காவிரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டம் நடத்தினர்.
காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், மேகேதாட்டு அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் அதை கண்டித்து தீர்மான நகலை தீயிட்டு எரித்தனர்.
அப்போது, கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் உடனடியாக பதவி விலக வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் கர்நாடக அரசு உடனடியாக மாதவாரியாக தமிழகத்துக்கு நீரை விடுவிக்க வேண்டும்.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என்ற நிலைபாட்டை கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் கைவிட வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முழக்கமிட்டனர்.
காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் த.மணிமொழியன், மாவட்ட நிர்வாகி துரை.ரமேஷ், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுந்தர விமல்நாதன், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், மாவட்டச் செயலாளர் நா.வைகறை, தமிழக விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மண்டலத் தலைவர் ப.ஜெகதீசன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹிமாயூன் கபீர், மாநில பொருளாளர் பாரதிச்செல்வன் உட்பட 300-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.