

சென்னை: இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு நடிகர் சிரஞ்சீவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
‘திரைக்கதை மன்னர்’ என புகழப்படும் பிரபல நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ் சினிமாவில் தனது தனித்துவ திரைக்கதை பாணியால் வெகுவாக ஈர்த்த பாக்யராஜின் இழப்பால் தமிழ்த் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
பாக்யராஜ் உடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள். திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாக்யராஜ் உடலுக்கு நாளை காலை 9.30 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
பாக்யராஜ் மறைவுக்கு இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: “மிகவும் அதிர்ச்சியும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்குக் கடுமையான மனவேதனையும் அடைந்துள்ளேன்.
நேற்று முன்தினம் தான், கோவாவில் நடைபெற்ற குஷ்பு மகள் திருமணத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்தோம். ஒன்றாக சிரித்து பேசி, ஜோக் பகிர்ந்து, புகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம். பாக்யராஜ் அப்போது மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்பட்டார். ஆனால், இன்று காலை அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டு விழிப்பது என்பது முற்றிலும் நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது.
சிறந்த இயக்குனர், அசாதாரணமான திரைக்கதை எழுத்தாளர் மற்றும் மிகச்சிறந்த நடிகர் என இந்திய சினிமாவிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். பூர்ணிமா, சாந்தனு மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த மாபெரும் இழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை அந்தக் குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கட்டும்” இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.