நெல் மூட்டைகளை உடனே இயக்கம் செய்ய கோரி கும்பகோணத்தில் ஆக.5 முதல் தொடர் காத்திருப்பு போராட்டம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

கும்பகோணம்: கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனே இயக்கம் செய்ய வலியுறுத்தி, கும்பகோணத்தில் ஆக.5 முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் மேற்கொள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் கும்பகோணத்தில் நேற்று இரவு நடைபெற்றது. நுகர்பொருள் வாணிபக் கழக பாரதிய தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். தொமுச ஆசைமுருகன், அண்ணா தொழிற்சங்கம் சக்தி, பாரதிய தொழிலாளர் சங்கம் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை 48 மணி நேரத்தில் சேமிப்பு கிடங்குகளுக்கு இயக்கம் செய்து பாதுகாக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், ஜூலை 31-ம் தேதி நிலவரப்படி, தஞ்சாவூர் அலகில் 839 டன், பட்டுக்கோட்டை அலகில் 10,275 டன், கும்பகோணம் அலகில் 66,929 டன் என மொத்தம் 78,043 டன் நெல், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ. 200 கோடியாகும்.

அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்த நெல் மணிகள் நனைந்து சேதமடைந்துள்ளன. மேலும், மாதக்கணக்கில் இயக்கம் செய்யப்படாமல் உள்ள நெல் மணிகளின் எடையும் இழப்பு ஏற்படுகிறது.

இந்த அனைத்து இழப்புகளையும் கொள்முதல் நிலைய பணியாளர்களே ஏற்க வேண்டி உள்ளது. இந்த இழப்பை நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், தமிழக அரசும், நுகர்ப்பொருள் வாணிபக் கழக நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில், நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஆக.5-ம்தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
‘சாதி, மதமற்றவர்’ சான்றுக்காக சட்டம் இயற்ற கோரி நடிகர் பார்த்திபன் பொது நல வழக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in