‘சாதி, மதமற்றவர்’ சான்றுக்காக சட்டம் இயற்ற கோரி நடிகர் பார்த்திபன் பொது நல வழக்கு

‘சாதி, மதமற்றவர்’ சான்றுக்காக சட்டம் இயற்ற கோரி நடிகர் பார்த்திபன் பொது நல வழக்கு
Updated on
1 min read

சென்னை: ‘சாதி, மதமற்றவர்’ என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாக சான்று வழங்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் பார்த்திபன் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் ‘சாதி, மதமற்றவர்’ என சான்றிதழ் பெற்ற நடிகர் பார்த்திபன், நீதிபதி தண்டபாணி முன் ஆஜராகி சான்றிதழைக் காண்பித்தார். அப்போது, ‘நீங்கள் மட்டும் பயனடைந்தால் போதாது. இதுபோல சான்றிதழ் கோரும் நபர்களும் பயனடைய வேண்டும்’ என நீதிபதி தெரிவித்ததை அடுத்து, இது சம்பந்தமாக பொது நல வழக்கு தாக்கல் செய்ய இருப்பதாக பார்த்திபன் தெரிவித்திருந்தார்.

அந்த மனுவில், ‘சாதி, மதமற்றவர் என சான்று கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் வகையில் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி அரசாணைகள் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால், அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கும், அப்போதைய அரசுக்கும் இடையில் சுமுக உறவு இல்லாததால், இந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது. தற்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை என்பதால், சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும்.

‘சாதி, மதமற்றவர்’ என சான்று வழங்க வகை செய்யும் சட்டம் இயற்றுவதால் வேறு எந்தச் சட்டத்துக்கும் எந்த பாதிப்பு ஏற்படப்போவதில்லை. தற்போது ‘சாதி, மதமாற்றவர்’ என சான்று வழங்க சட்டங்கள் அல்லது உத்தரவுகள் ஏதும் இல்லாததால், புதிதாக சட்டம் இயற்றும்போது, ‘சாதி, மதமற்றவர்’ என சான்று கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும்’ என பார்த்திபன் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

‘சாதி, மதமற்றவர்’ சான்றுக்காக சட்டம் இயற்ற கோரி நடிகர் பார்த்திபன் பொது நல வழக்கு
“மேகேதாட்டு விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட முடியுமா முடியாதா?” - மு.க.ஸ்டாலின் காட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in