

போராட்டம்
ராஜபாளையம்: ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் தமிழக அரசின் பொங்கல் சேலை நெசவு செய்யும் நெசவாளர்கள் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 29 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக அரசின் பொங்கல் சேலை நெசவு செய்யப்படுகிறது. 2027 பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ள புதிய ரக சேலைக்கு ரூ.250 கூலி நிர்ணயம், பழைய ரக சேலைகள் கொள்முதல், வேலை இழப்புக்கு நிவாரணம் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் உள்ள 1.44 லட்சம் பழைய ரக சேலைகள் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பெரும்பாலான நெசவாளர்கள் போராட்டதை கைவிட்டு, நூல்களை எடுத்து புதிய ரக சேலை நெசவு பணிகளை தொடங்கி உள்ளனர்.
ராஜபாளையம் அருகே புனல்வேலி மற்றும் முத்துசாமிபுரம் கூட்டுறவு சங்க நெசவாளர்கள் புதிய ரக சேலைக்கு கூலி நிர்ணயம் செய்தால் மட்டுமே நெசவு பணிகளை தொடங்குவோம் எனக்கூறி கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று முதல் ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் நெசவாளர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, மாவட்ட செயலாளர் குருசாமி, நிர்வாகிகள் ராமர், மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.