

சென்னை: ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி, சென்னையைச் சேர்ந்த 69 வயது ஓய்வுபெற்ற வங்கி ஊழியரிடம் ரூ.3.40 கோடி மோசடி செய்த வழக்கில், ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த 69 வயது ஓய்வுபெற்ற வங்கி ஊழியரை, கடந்த 2025-ம் ஆண்டு வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், தான் ராஜீவ் மேத்தா என்ற தலைமை முதலீட்டு அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும், பெங்களூருவில் செயல்படும் தங்களது முதலீட்டு நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி அவரை நம்ப வைத்துள்ளார்.
இதற்கிடையே, ‘FYERSHNIVIP’ என்ற பெயரில் செயல்பட்ட வாட்ஸ்-அப் குழுவில் சுமார் 50 பேர் உறுப்பினர்களாக இருப்பது போன்றும், அவர்கள் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டியிருப்பது போன்றும் போலியான உரையாடல்கள் பகிரப்பட்டன. இதை உண்மை என நம்பிய ஓய்வுபெற்ற வங்கி ஊழியர், நிறுவனம் வழங்கிய பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு 13 தவணைகளாக மொத்தம் ரூ.3.40 கோடியை அனுப்பியுள்ளார். பின்னர் இது மோசடி என்பதை உணர்ந்த அவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீ ஸார், சைபர் குற்றப்பிரிவு காவல் அதிகாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதில், ஆந்திராவில் இருந்து இந்த மோசடி அரங்கேற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, விசாகப்பட்டினம் சென்ற போலீஸார், அனகாப்பள்ளி மண்டலத்தைச் சேர்ந்த கொனத்தலா கிருஷ்ணா (52) என்பவரை கைது செய்து சுமார் ரூ.21 லட்சத்தை மீட்டனர். மேலும் இதில் தொடர்புடையவர்களை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.