

சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை மூடும் வகையிலான தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் காளிதாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அடிப்படை ரத்தப் பரிசோதனை நிலையங்கள் செயல்பட எந்தவித குறைந்தபட்ச இட நிர்ணயத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. ஆனால், தமிழக அரசு, ரத்தப் பரிசோதனை, எக்ஸ்-ரே, மற்ற பரிசோதனை நிலையங்கள் செயல்பட தேவையான இடவசதி குறித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, நகர்ப்புறத்தில் 500 முதல் 700 சதுர அடி பரப்பளவும், கிராமப்புறத்தில் 300 சதுர அடி பரப்பளவும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
குறைந்த கட்டணத்தில்....: ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ள ரத்தப் பரிசோதனை நிலையங்கள் பெரும்பாலும், 100 சதுர அடிக்கு குறைவாகவே உள்ளன. ஆய்வக நுட்புனர் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருப்பவர்கள், சிறிய அளவிலான ரத்தப் பரிசோதனை மையங்களை நடத்தி வருகின்றனர். குறைந்த கட்டணத்தில் ஏழை மக்களுக்கு சர்க்கரை உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து வருகிறோம்.
அரசின் இந்த நடவடிக்கையால், சிறிய அளவிலான ரத்தப் பரிசோதனை நிலையங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி பிப்ரவரி 15-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.