

பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி
புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் காங்கிரஸ் கூட்டு வைத்துள்ளதாக, ராகுலின் ஜெர்மனி பயணம் குறித்து பாஜக விமர்சனம் செய்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் ஜெர்மனி சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இந்தியா மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
இதுகுறித்து பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி நேற்று கூறியதாவது: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி ஆலோசகராக விளங்கிய சாம் பிட்ரோடா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஆலோசகராகவும் விளங்குகிறார். அவர் அளித்த பேட்டியில், “உலகளாவிய முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கிறது. அதன் கூட்டத்தில் பங்கேற்க ராகுல் ஜெர்மனிக்கு பயணம் செய்தார்” என்றார்.
உலகளாவிய முற்போக்குக் கூட்டணி, இந்தியாவுக்கு எதிரான கட்டுக் கதைகளை ஊக்குவிக்கும் பல அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ளது.
அந்தக் கூட்டணிக்கும் காங்கிரஸுக்கும் உள்ள தொடர்பு குறித்து சாம் பிட்ரோடாவிடம் கேட்ட போது, ராகுல் காந்தியும் தானும் அதில் உறுப்பினராக இருப்பதாக கூறியுள்ளார். எனவே, இந்தியாவுக்கு எதிரான உலகளாவிய சதியில் காங்கிரஸும் உறுப்பினராகிவிட்டதா என நான் கேட்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் சாம் பிட்ரோடா பேசும் வீடியோவை பாஜக சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அத்துடன், “இந்தியாவுக்கு எதிராக செயல்படும் ஜார்ஜ் சோரஸுடன் தொடர்புடைய உலகளாவிய கூட்டணியில் ராகுல் அங்கம் வகிக்கிறார் என பிட்ரோடா ஒப்புக் கொண்டுள்ளார். முற்போக்குவாத போர்வையில் செயல்படும் அமைப்பு இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இத்தகைய தொடர்பு உள்ளதா என்பது இப்போது கேள்வி அல்ல, அவை ஏன் இவ்வளவு சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பதுதான் கேள்வி. இதற்கு ராகுல் எப்போது பதில் அளிப்பார்?” என பதிவிடப்பட்டுள்ளது.