

மூலக்கொத்தளம் மாயானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 350-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் தூய்மைப் பணியை தனியார்மயமாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்மண் டலங்களில் தற்காலிகமாக பணி புரிந்த தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தூய்மைப் பணியை மாநகராட்சியே நேரடியாக மேற்கொள்ள வேண்டும். அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும். அனைத்து பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தூய்மைப் பணியாளர்களுக்கு பணியின் போது 3 வேளை உணவு, குடியிருப்பு வசதி, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட 7 அறிவிப் புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன் பின்னர் தூய்மைப் பணியாளர்கள் பலர் பணிக்கு திரும்பிய நிலையில், ஒரு பிரிவினர், பணி நிரந்தரம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர், வருவாய் இழப்பால்தற் கொலை செய்து கொண்டதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் கூறி வரும் நிலையில், அவர் மறைந்த 16-ம் நாளான நேற்று, மூலக்கொத்தளத்தில் உள்ள அவரது சமாதியில் நேற்று கூடி அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 350-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து, பின்னர் மாலையில் விடுவித்தனர்.