

தமிழுக்கும், தமிழகத்துக்கும் தன்னையே அர்ப்பணித்த அறிவிற் சிறந்த ஆளுமைகளை தமிழகம் மறந்து விட்டது. அவர்களின் வாழ்வும், பணியும் ஆவணப்படுத்தப்படாமல் காலத்தோடு கரைந்து போய்விட்டன. அத்தகையோரில் ஒருவர்தான் டி.கோபால செட்டியார். தருமபுரி மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் 1867 நவ.18-ம் நாள் பிறந்த இவர் 90 வயது வரை வாழ்ந்திருந்தார். அக்காலத்தில் எப்.ஏ. தேர்வில் வெற்றி பெற்று திருப்பத்தூரில் வழக்கறிஞராகப் பணி புரிந்தார். அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய எவ்வித தகவல்களும் இதற்குமேல் கிடைக்கவில்லை.
‘தருமபுரி மண்ணும் மக்களும்’ என்ற பேராசிரியர் த.பழமலம் எழுதிய நூலிலும், தருமபுரி பூர்வ சரித்திர நூலின் முன்னுரையிலும் கோபால செட்டியாரின் எழுத்துப் பணி பற்றிய விவரங்களை ஓரளவு அறியமுடிகிறது. ஆங்கிலத்திலும், தமிழிலும் கவிபாடும் ஆற்றல் மிக்கவராக திகழ்ந்தார். 1901-ம் ஆண்டு விக்டோரியா மகாராணி மறைந்தபோது இவர்எழுதிய இரங்கற்பா ஆங்கில அரசி யலாரின் நெஞ்சை நெகிழ வைத்தது.
இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் வேல்ஸ் இளவரசராக தமிழகம் வருகை தந்தபோது அவருக்கு எழுதிய வாழ்த்துப்பாவை வாசித்துப் பார்த்த இளவரசர், கோபால் செட்டியாரை நேரில் அழைத்துப் பாராட்டி ‘உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள்’ என்றபோது “நான் ஆங்கிலத்தில் நடத்தி வரும் ‘The New Reformer’ என்ற சஞ்சிகையை இங்கிலாந்து நூலகங்கள் அனைத்திலும் இடம்பெறச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். ஒரு எழுத்தாளன் வேறு என்ன கேட்பான்? நீங்கள் விரும்பியபடியே செய்கிறேன் என்று ஆணை பிறப்பித்தார் வேல்ஸ் இளவரசர். கோபால் செட்டியார் திருப்பத்தூரில் ஒரு வாசகசாலை தொடங்கி அதற்கு ‘Prince of Wales Reading Room’ என்று பெயரிட்டார்.
தந்தை பெரியார் தமது பல சீர்திருத்தக் கருத்துகளுக்கு கோபால செட்டியாரின் ‘The New Reformer’ இதழ்தான் முன்னோடி என்று கூறியதாக சொல்கிறார்கள். தாம் பார்த்துவந்த வழக்கறிஞர் வேலை பிடிக்காததால் அதை உதறிவிட்டு முழுநேர சமூக சீர்திருத்தப் பணியிலும், சைவ சித்தாந்தத்தை உலகெங்கும் பரப்பும் பணியிலும் ஈடுபட்டார். சைவ சித்தாந்தம் பற்றி இவர் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் 1923-ல் லண்டனில் வெளியிடப்பட்டது. லண்டன் டைம்ஸ் இதழ் இந்நூலைப் பாராட்டி எழுதியது.
இவர் எழுதிய லியோ டால்ஸ் டாயின் வாழ்க்கை வரலாறு, தி நியூ ரீஃபார்மரில் அவர் எழுதிய கட்டுரைகள், சிதம்பர ரகசியம் முதலான நூல்கள் எங்கும் கிடைக்கவில்லை. இவர் தருவித்த சேகரித்த அரிய நூல்களின் பெருந்தொகுப்புகளைக் கொண்ட பெரிய நூலகம் என்னவாயிற்று என்றும் தெரியவில்லை.
ஆதிதிராவிடர்கள்தான் இம்மண்ணின் பூர்வ குடிகள் என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவும் இவர் எழுதிய ஆதிதிராவிடர் பூர்வ சரித்திரம் என்ற நூல் ஒன்றே இப்போது கிடைக்கிறது.
இம்மானுவேல் ஸ்வீடன் பர்க் இலத்தீன் மொழியில் எழுதிய ‘வாழ்க்கை போதம்’ என்ற நூலை மொழிபெயர்த்தார். இதுவரை முப்பொருளுறவு, பரமகச்சா, ஞான தீபிகை சுடர், சிவஞான சூரன் பராக்கிரமம், நூதன மறுமை விளக்கம், தமிழர் சரித்திரம் போன்ற அரிய நூல்கள் தற்போது எங்கும் கிடைக்கப்பெறவில்லை. The New Reformer இதழில் ஒரு பிரதி கூட கிடைக்கவில்லை. உலகப் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ் டாய் இந்தியாவில் காந்திக்கு அடுத்தபடியாக கோபால் செட்டியாரிடம் மட்டும் கடிதப் போக்குவரத்துக் கொண்டிருந்தார்.
டால்ஸ் டாய் தான் மறைவதற்கு ஓராண்டுக்கு முன் தன்னைக் குறித்து உலக அறிஞர்களிடம் கட்டுரை கேட்டுப் பெற்றார். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 55 கட்டுரைகளில் கோபால் செட்டியாரின் கட்டுரையும் ஒன்று. ‘பெர்சியாவின் பாஹாப்’ என்ற மதத்தை ஏற்படுத்திய அப்துல் பாஹா அப்பாஸ், ‘கோபால் செட்டியார் ஒரு ஆன்மீக ஞானி’ என்றே வியந்து கூறியிருக்கிறார். இவர் தமிழில் கவிதை இயற்றும் ஆற்றலைக் கண்ட அறிஞர்கள் இவரை ‘திருப்பத்தூர் கவிராயர்’ என்றே போற்றினர்.
கோபால செட்டியார் எழுதிய ‘தருமபுரி பூர்வ சரித்திரம்’ என்ற நூலை முதற்பதிப்பின் அதே அச்சு வடிவத்தில் வடிவமைத்திருக்கிறார் நெ.த.அறிவுடை நம்பி.தொடர்புக்கு: Thanjavurkavirayar@gmail.com