கவுரவ விரிவுரையாளர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேல்முருகன் வலியுறுத்தல்

வேல்முருகன் | கோப்புப் படம்
வேல்முருகன் | கோப்புப் படம்
Updated on: 
1 min read

சென்னை: கவுரவ விரிவுரையாளர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில், தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 6 அரசு கல்வியியல் கல்லூரிகள் என 187 அரசு கல்லூரிகளில் 8,741 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் பலர் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகின்றனர்.

உதவிப் பேராசிரியர் பணிக்குத் தேவையான கல்வித் தகுதிகளைப் பெற்றிருந்தும், நிரந்தரப் பேராசிரியர்களுக்கு இணையான கல்விப் பணியைச் செய்து வந்தும், இத்தனை ஆண்டுகளாக அவர்களைத் தற்காலிகப் பணியாளர்களாகவே வைத்திருப்பது மிகப்பெரிய சமூக அநீதியாகும்.

பல்கலைக்கழக மானியக் குழு கடந்த 2019-ம் ஆண்டு வெளியிட்ட வழிகாட்டுதலில் கவுரவ ஆசிரியர்களுக்கு ஒரு பாடவேளைக்கு ரூ.1,500 வீதம், மாதத்துக்கு அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வழங்கும் நடைமுறையை வகுத்துள்ளது. ஆனால், தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுவதுடன், 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. 12 மாதங்களும் அரசுப் பணியைச் செய்யும் ஆசிரியர்களுக்கு 11 மாதங்களுக்கு மட்டும் ஊதியம் வழங்குவது எந்த வகையான தொழிலாளர் நீதியாகும்? யுஜிசி வழிகாட்டுதலை தமிழக அரசு ஏன் பின்பற்றவில்லை?

மேலும், ஒரே கல்வி நிறுவனத்தில் ஒரே பணியைச் செய்யும் ஆசிரியர்களுக்கு வேறுபட்ட ஊதியம் வழங்குவது “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படைக் கொள்கைக்கு எதிரானதாகும்.

ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்களின் குடும்பங்களுக்கே எதிர்காலம் இல்லாத நிலையை அரசு இனியும் அனுமதிக்கக் கூடாது. அரசுக் கல்லூரிகளுக்கான 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையில், கவுரவ விரிவுரையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட 1,146 பணியிடங்களையும் உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும்.

மேலும், அரசாணை 56-ன் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட நடைமுறைகளை முடித்துத் தகுதி பெற்றவர்களின் பட்டியல் ஏற்கெனவே அரசிடம் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தால், அந்தப் பட்டியலை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும்.

கவுரவ விரிவுரையாளர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில், தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வேல்முருகன் | கோப்புப் படம்
“தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழகத்துக்கு விடிவே இல்லை” - மு.க.ஸ்டாலின்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in