

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சமூக நலக்கூடத்தில் கடைசி நாளான நேற்று விண்ணப்ப படிவத்தை பலர் சமர்ப்பித்தனர். படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், பொதுமக்களிடம் இருந்து பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) கடந்த நவ.4-ம் தேதி தொடங்கின. இப்பணிகளில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) 68,470 பேர் ஈடுபட்டனர். வீடு வீடாகச் சென்று எஸ்ஐஆர் படிவங்களை விநியோகம் செய்வது, பூர்த்தி செய்த படிவங்களை அவர்களிடம் இருந்து திரும்பப் பெறுவது, அதில் உள்ள விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் டிச.4-ல் முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, இப்பணிகளில் சிக்கல்கள் எழுந்தது மற்றும் பருவமழை காரணமாக, அவகாசத்தை நீட்டிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதன்படி, முதலில் டிச.11-ம் தேதி வரையும், அதைத் தொடர்ந்து மேலும் 3 நாட்கள் என டிச.14-ம் தேதி வரையும் அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், படிவங்களை வாக்காளர்களிடம் வழங்கி, அவர்களிடம் இருந்து பூர்த்தி செய்து திரும்பப் பெறுவது ஆகிய பணிகள் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் பொதுமக்களிடம் வழங்கி படிவங்கள் திரும்ப பெறப்பட்டது, முகவரி கண்டறிய முடியாதது, நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடியேறியது, உயிரிழந்தவர்கள் உள்ளிட்ட வகைகளில் 100 சதவீத படிவங்கள் மீதும் தீர்வு காணப்பட்டு, கணினியிலும் 100 சதவீதம் பதிவேற்றப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தற்போது, கணினியில் பதிவேற்றப்பட்ட படிவங்களை உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக குடியேறியவர்கள் என பகுப்பாய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
அன்று முதல், மக்கள் தங்களது படிவங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆட்சேபங்களை தெரிவிக்கலாம். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி மாதம் வெளியிடப்பட உள்ளது.