

நயினார் நாகேந்திரன்|கோப்புப் படம்
சென்னை: பாஜக சார்பில் நடைபெற்று வரும் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிலரங்க கூட்டத்தில் அனைத்து பூத் முகவர்களும் பங்கேற்க வேண்டும் என கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதற்கான ஆயத்தப் பணிகளுல் ஒன்றான 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி மாநாடு, வாக்குச்சாவடி நிலை முகவர் (பிஎல்ஏ) -2 (பிஎல்ஏ-2) பயிலரங்கக் கூட்டம் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் பற்றிய பயிலரங்கக் கூட்டம் 13-ம் தேதி மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளது.
டிச.13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டங்கள், ஒரே சமயத்தில் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வுகள் அனைத்தையும் வெற்றிகரமாக வடிவமைத்து அதை செயல்படுத்தி வரும் தேசிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான கமிட்டி உறப்பினர் மற்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத் தலைவர் மற்றும் பிஎல்ஏ-2 மாநில அமைப்பாளர் கரு.நாகராஜன், மாநில துணைத் தலைவர் மற்றும் பூத் கமிட்டி மாநில அமைப்பாளரான ஜெயபிரகாஷ் ஆகியோருக்கு வாழ்த்துகள்.
மேலும் இது தமிழக பாஜகவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் கிடைத்த வெற்றிக்கான முதல் படி. அனைத்து பிஎல்ஏ-2 பூத் முகவர்களும் இந்த பயிலரங்கை முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டு 2026 பேரவை தேர்தல் களத்தில் வீரியத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.