திருச்சி: தமிழகத்தில் இன்று (நவ. 28) முதல் 4 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ந.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இலங்கையின் தெற்குப் பகுதியில் உருவாகியுள்ள ‘டிட்த்வா’ புயல் மெதுவாக நகர்ந்து வரும் 30-ம் தேதி புதுச்சேரி-சென்னை இடையே கரையை கடக்கும்.
இதனால் தமிழகத்தில் இன்று (நவ. 28) தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், அதை ஒட்டியுள்ள திருச்சி,அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தரைக்காற்றுடன் கூடிய மிதமான மழைப்பொழிவு தொடங்கும்.
படிப்படியாக மழை தீவிரமாகி நாளையும், வரும் 30-ம் தேதியும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 48 மணி நேர தொடர் கனமழை மற்றும் மிக கனமழையாக நீடிக்கும்.
ந.செல்வகுமார்
மேலும், இந்தப் புயல் வரும் 29, 30 மற்றும் டிச.1-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுச்சேரி ஆகிய வடகடலோர மாவட்டங்களில் 48 மணி நேர தொடர் தீவிர மழைப்பொழிவைக் கொடுக்கும்.
இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் முதல் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் வரை கடலோரப் பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.