

திருச்சி: டிட்வா புயலால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ந.செல்வகுமார் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இலங்கையில் இருந்து மெல்ல நகரும் டிட்வா புயல் இன்று (நவ.29) டெல்டா பகுதியில் செயலிழக்கும்.
இன்றும், நாளையும் டெல்டா மாவட்ட கடற்கரையையொட்டி சில மணி நேரம் நீடித்து, பிறகு மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து நாளை புதுச்சேரி- மாமல்லபுரம் இடையே மேலும் செயலிழந்து கரையை கடக்கும்.
இதன் காரணமாக இன்றும், நாளையும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 48 மணி நேர தொடர் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும்.
அதேபோல, இன்று முதல் டிச.1 வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுச்சேரி மாவட்டங்களிலும் 48 மணி நேர தொடர் கனமழை இருக்கும்.
டெல்டா மாவட்டங்கள் முதல் சென்னை, திருவள்ளூர் மாவட்டம் வரை கடலோரப் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களிலும் பாதிப்பு இருக்கும்.
தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் கிழக்குப் பகுதிகள் மற்றும் திருப்பத்தூரிலும் கனமழை இருக்கும். மேற்கு மாவட்டங்களில் மிதமானது முதல் சற்று கனமழை ஆங்காங்கே இருக்கும்.
இந்த தாழ்வு மண்டலம் டெல்டா பகுதிகளில் கடற்கரைக்கு மிக நெருக்கமாக நகர்ந்து வட கடலோரத்தை அடையும் என்பதால் 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில், அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நாளை வரை மிதமான காற்று வீசும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.