

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான ஞானசேகரன் உடல்நலக் குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பிரியாணி கடை உரிமையாளர் ஞானசேகரனை (38) கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸார் 2024 டிசம்பரில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை (30 ஆண்டு சிறை) விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-ம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் புழல் சிறையில் தண்டனை கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு நேற்று அதிகாலை 1.30 மணியளவில் திடீரென உடல் நலக்குறைவு (வலிப்பு) ஏற்பட்டதை அடுத்து, சிறைக் காவலர்கள் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது ஞானசேகரன் அவசர சிகிச்சைப் பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கெனவே 4 முறை ஞானசேகரனுக்கு இதுபோன்று வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ள நிலையில், தற்போது 5-வது முறையாக வலிப்பு நோய் காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.