

சென்னை: மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய சாதாரண கட்டணப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என, மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பிரபு சங்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் 23ம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் நாள் அன்று மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள், தங்களது வாக்குகளை பதிவுசெய்ய மாநகர போக்குவரத்துக் கழக சாதாரண கட்டண பேருந்துகளில் பயணம் செய்யும் போது கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
ஒரு நாள் மட்டுமே..
60 வயதுக்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்கள் வாக்குகளை பதிவு செய்ய சாதாரண கட்டண பேருந்துகளில் மட்டும் பயணம் செய்யும் போது ஏதேனும் வயது சான்று மற்றும் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து, மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்களை அளிக்காமல், கட்டணமில்லா பயணச் சீட்டை நடத்துநரிடம் பெற்று பயணம் செய்யலாம்.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் வாக்குகளை பதிவு செய்ய அவர்கள் யுடிஐடி அட்டை மற்றும் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பயணச் சீட்டை பெற்று பயணம் செய்யலாம். தேர்தல் நாள் அன்று ஒரு நாள் மட்டுமே இச்சலுகையில் பயணம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.