

ராகவன்
கோவை/சென்னை: கோவை மத்திய சிறையில் ரிமாண்ட் செய்ய வந்த போது நேற்று கைதி ஒருவர் தப்பியோடினார். அவரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக எஸ்ஐ உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரைச் சேர்ந்த ராகவன்(25) என்பவர் வழிப்பறி வழக்கு தொடர்பாக கோவை மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு பெங்களூரில் வழிப்பறி, திருட்டு வழக்குகளில் தொடர்பு இருந்ததால் அம்மாநில போலீசார் கடந்த ஜூன் மாதம், கோவை மத்திய சிறையில் இருந்த ராகவனை அழைத்துச் சென்று அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் கோவைக்கு திரும்ப அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது, அன்னூர் அருகே ராகவன் தப்பியோடி விட்டார். இது தொடர்பாக அன்னூர் போலீஸார் வழக்குப்பதிந்தனர்.
இந்நிலையில், பவானிசாகரில் பதுங்கியிருந்த ராகவனை அன்னூர் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக நேற்று அதிகாலை (சுமார் 12.40 மணி) அவரை எஸ்ஐ உள்ளிட்ட 4 காவலர்கள் அழைத்து வந்தனர். நஞ்சப்பா சாலை வழியாக கோவை மத்திய சிறை வளாகத்தில் நுழைந்த உடன் ராகவனின் கை விலங்கை போலீஸார் கழட்டிய போது, அவர்களை தள்ளிவிட்டு ராகவன் தப்பியோடினார்.
இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப்பதிந்தனர். காவல் ஆணையர் ரம்யா பாரதி, காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி ஆகியோரின் உத்தரவின் பேரி்ல் 6 தனிப்படைககள் அமைத்து ராகவனை தேடி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக எஸ்ஐ அப்துல் முத்தலீப், காவலர்கள் ரஞ்சித், தினேஷ், கார்த்திக் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
போக்சோ கைதி ஓட்டம்: சென்னை புழல் காவாங்கரை கண்ணப்பர் நகரைச் சேர்ந்தவர் டேவிட் அன்பரசன் (61). ஆட்டோ ஓட்டுநரான இவர், அதே பகுதியில் உள்ள குழந்தைகளை தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்தார். 2 நாட்களுக்கு முன்பு தனது ஆட்டோவில் பயணம் செய்த 8 வயது சிறுமியிடம் டேவிட் அன்பரசன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் புழல் அனைத்து மகளிர் போலீஸார் டேவிட் அன்பரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதனிடையே, சிறுமியின் உறவினர்கள் தாக்கியதில் காயமடைந்த டேவிட் அன்பரசனை, புழல் காவல் நிலைய காவலர்கள் சலீம் மற்றும் விஜயராகவன் ஆகியோர் ஆட்டோவில் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் உள்நோயாளியாக அனுமதித்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் அவருக்குப் பாதுகாப்பாக 2 போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், நேற்று காலை போலீஸார் கவனக்குறைவாக இருந்த நேரத்தில், மருத்துவமனையில் இருந் டேவிட் அன்பரசன் தப்பியோடினார்.
இதையடுத்து, புழல் போலீஸார் தனிப்படை அமைத்து தப்பியோடிய டேவிட் அன்பரசனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், கைதிக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடமும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.