“சிறைத்துறையின் தோல்வி” - கைதிகள் தப்பி ஓட்டம் குறித்து அன்புமணி காட்டம்

பாமக தலைவர் அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி

Updated on: 
1 min read

சென்னை: ‘தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவத்துக்கு சிறைத்துறையின் தோல்வியே காரணம்’ என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தேனி மாவட்டம் தேக்கம்பட்டி பகுதியில் உள்ள சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் 17 பேர் நேற்றிரவு சிறைக்காவலர்களை தாக்கி விட்டு தப்பி ஓடியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

போக்சோ வழக்குகள் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கைதிகள் தப்பிச் செல்லும் அளவுக்கு மாவட்ட சிறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலவீனமாக இருந்தது கண்டிக்கத்தக்கது.

திரைப்படக் காட்சிகளில் மட்டுமே இடம் பெற்று வந்த கைதிகள் தப்பி ஓடுவது போன்ற காட்சிகள், நிஜத்திலும் நடக்கத் தொடங்கியிருப்பது நல்லதல்ல. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறை, சிறைத்துறை போன்றவற்றின் நிர்வாகம் பலவீனமடைந்து வருவதையே இது காட்டுகிறது.

மாவட்ட சிறையில் இருந்த அனைத்து காவலர்களையும் தாக்கி விட்டு, ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பி ஓடியிருப்பதை மிகவும் சாதாரணமான நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியாது. சிறைத்துறையின் தோல்வியையே இது காட்டுகிறது.

சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓடியதாகக் கூறப்படும் நேரத்திற்கும், இந்த நிகழ்வு குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நேரத்திற்கும் அதிக இடைவெளி இருப்பது இந்த நிகழ்வு குறித்து பல ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. கைதிகள் தப்பி ஓடி 12 மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை 4 பேர் மட்டும் தான் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி சிறையிலிருந்து தப்பி ஓடிய கைதிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். கைதிகள் தப்பி ஓடியதன் பின்னணியில் ஏதேனும் திட்டம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். இந்த விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>பாமக தலைவர் அன்புமணி</p></div>
“ஒன்றுக்கும் உதவாததாக தவெக அரசு உள்ளது” - 17 கைதிகள் தப்பியதை அடுத்து ஸ்டாலின் காட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in