

பிரிசில்லா பாண்டியன்
திருநெல்வேலி: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ராஜபாளையம் தொகுதி வேட்பாளராக பிரிசில்லா பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட ராஜபாளையம் தொகுதியில் எனது மனைவியும், கட்சியின் பொதுச்செயலாளருமான வழக்கறிஞர் பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுகிறார்.
ராஜபாளையம் தொகுதியில் கடந்த ஓராண்டாகவே தீவிர களப்பணியாற்றி வருகிறோம். அங்கு பிரதான பிரச்சினையாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. தொழிலாளர்கள் மற்றும் ஏழை, எளியவர்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. அவை அனைத்தையும் தீர்த்து வைப்போம்.
ராஜபாளையத்தில் முகாமிட்டு களப்பணியை தொடங்க உள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம். தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்த கூட்டணியின் தலைவரான பழனிசாமியை முதல்வராக அரியணையில் அமர வைப்போம்.
எங்களது வேட்பாளர் சாதி, மத பேதமின்றி அனைத்து சமுதாய மக்களுக்கும் சேவை செய்வார். தொழிலாளர்கள் நிறைந்த அந்த பகுதியில் அவர்களது வாழ்வு மேம்பட கடினமாக உழைப்பார்.
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிப்பு செய்து தடுக்க வேண்டும் என்றார். அப்போது, தமமுக மாநில இளைஞரணி செயலாளர் வியங்கோ பாண்டியன், மகளிரணி செயலாளர் வினோலின் நிவேதா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.