

மதுரை: கிறிஸ்தவ பாதிரியார் ஒருவரின் கல்வி, பராமரிப்பு, சிகிச்சை மற்றும் இறுதிச் சடங்கு செலவுகளை அவர் சார்ந்த மத அமைப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், சம்பந்தப்பட்ட பாதிரியார் பணிக் காலத்தில் சேமித்த நிதி அவர் சார்ந்த அமைப்புக்கே சேர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஏபிவிஎம் கத்தோலிக்கச் சங்கத்தைச் சேர்ந்த பாதிரியார் தெய்வகுமார் அருளானந்தம். இவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கரூர் மாவட்டம் குளித்தலையில் பாதிரியாராகப் பணிபுரிந்தபோது அங்குள்ள எஸ்பிஐ வங்கியில் தனிக் கணக்குத் தொடங்கி ரூ.56 லட்சம் வைப்பு நிதி செலுத்தியுள்ளார்.
அவர் உயிரிழந்த நிலையில் அந்த வைப்பு நிதிக்கு உரிமை கோரி ஏபிவிஎம் கத்தோலிக்க சங்கம் சார்பிலும், அவரது சகோதரர்கள் தெய்வநாயகம், ஜோசப், சகோதரி மகள் மேரி ஜமீலா ஆகியோர் தரப்பிலும் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணைக்குப் பின்பு வைப்பு நிதி உறவினர்களுக்குத்தான் சொந்தம் என தீர்ப்பளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து ஏபிவிஎம் கத்தோலிக்க சங்கத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தெய்வகுமார் அருளானந்தம் பாதிரியாராக பணியாற்றிய காலத்தில் அவர் ஈட்டிய அனைத்து உடைமைகளும் சங்கத்துக்குச் சொந்தமானது என உயில் எழுதி வைத்துள்ளார். இதனால் அவரது அனைத்து உடைமைகளுக்கும் சங்கமே வாரிசுதாரர். அவர் சேலத்தில் பாதிரியாராகப் பணிபுரிந்தபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கான சிகிச்சைக்கு சங்கமே முழுமையாகச் செலவிட்டது.
ஒருவர் மத அமைப்பில் சேர்ந்த பிறகு அவர் தனது மத வாழ்க்கையின்போது ஈட்டிய சொத்துகள் மீது அவருக்குத் தனிப்பட்ட உரிமையோ அல்லது பற்றோ இருக்காது. அந்தச் சொத்துகள் அந்த அமைப்பின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டவை. எனவே, கரூர் நீதிமன்ற உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் என்.ஆனந்த்வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: பாதிரியார் தொடக்கக் காலங்களில் வளர்ந்து வருவதற்குத் தேவையான கல்வி, பராமரிப்பு, சிகிச்சை மற்றும் இறுதிச் சடங்கு போன்ற செலவுகளை அவர் சார்ந்த மத அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, அவர் பணிக்காலத்தில் திரட்டிய நிதி அவர் சார்ந்த அமைப்புக்கே சேர வேண்டும் என்பது தெளிவாகிறது.
ஒரு மதகுருவின் சகோதரர்கள் மற்றும் சகோதரியின் மகள் ஆகியோர் தாங்கள் அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் என்ற ஒரே காரணத்துக்காக அவர் மறைந்த பிறகு அவரது சொத்துகளுக்கு உரிமை கோருவதை இந்த நீதிமன்றம் ஏற்கவில்லை. அவர்கள் திருமுழுக்கு பெற்ற கிறிஸ்தவர்களாக இருப்பதும், அந்த மதகுரு மத வாழ்க்கையில் நுழைந்த பிறகு அவரது விவகாரங்களில் தங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே, கரூர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இந்த உரிமையியல் மேல்முறையீடு நிலுவையில் இருந்த காலத்தில் இறந்த பாதிரியாரின் உறவினர்கள் வைப்புத் தொகையைப் பெற்றுக்கொண்டதாக தெரிகிறது. அந்தத் தொகையை ஒரு மாதத்தில் 3 பேரும் வட்டியில்லாமல் ஏபிவிஎம் சங்கத்துக்கு திருப்பிச் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட மாதத்துக்குள் திருப்பிச் செலுத்தத் தவறினால், தீர்ப்பு வழங்கிய நாளிலிருந்து தொகை முழுமையாகச் செலுத்தப்படும் தேதி வரை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்துச் செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.