

பொன்னேரி அருகே திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோயில் திருத்தேர் திருவிழாவில் தேர் கவிழ்ந்தது.
பொன்னேரி: திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோயில் திருத்தேர் திருவிழாவில் தேர் கவிழ்ந்து, அர்ச்சகர் காயமடைந்த சம்பவம், பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே திருப்பாலைவனம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான லோகாம்பிகாதேவி சமேத திருப்பாலீஸ்வரர் கோயில். முதலாம் ராஜேந்திரசோழன் காலத்தில் அமைக்கப்பட்ட இக்கோயில், இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோயிலில் கடந்த 23-ம் தேதி பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இவ்விழாவில், நாள்தோறும் திருப்பாலீஸ்வரர் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். இந்நிலையில், பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவின் முக்கிய திருவிழாவான திருத்தேர் திருவிழா நேற்று காலை தொடங்கியது.
இதில், வண்ண மலர்கள், வாழை மற்றும் துணி தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சுமார் 22 அடி உயரம் மற்றும் 5 டன் எடைக் கொண்ட மரத்திலான திருத்தேரில் லோகாம்பிகாதேவி சமேத, திருப்பாலீஸ்வரர் எழுந்தருளி முக்கிய மாட வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டிருந்தார்.
பொன்னேரி, திருப்பாலைவனம், பழவேற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் தேரோட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கியது.
அப்போது, திருத்தேர், திருப்பாலைவனம் காவல் நிலையத்தை கடந்து பழவேற்காடு சாலைக்கு வரும் போது எதிர்பாராதவிதமாக சாலையில் கவிழ்ந்தது. இதில், தேரில் இருந்த, கோயில் அர்ச்சகரான அரவிந்த் என்கிற நாகராஜ் கையில் காயமடைந்து, பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருப்பாலைவனம் போலீஸார்,தீயணைப்பு வீரர்கள், விபத்தில் சிக்கிய தேரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.