

புதுடெல்லி: புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார்.
கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை (MGNREGA) அமல்படுத்தியது. இதன் படி, கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வந்தது.
இந்த திட்டத்தின் பெயர் தற்போது ‘வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஊரக வேலை உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம்’ (விக்ஷித் பாரத் கேரன்ட்டி ஃபார் ரோஜ்கர் அண்டு அஜீவிகா மிஷன்) என்று மாற்றப்பட்டுள்ளது. இது, சுருக்கமாக ‘ஜி ராம் ஜி’ என்று அழைக்கப்படுகிறது. இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து, இந்த மசோதா சட்டமானதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்ட அறிக்கை: புதிய சட்டத்தின்படி, கிராமப்புறப் பகுதிகளில் ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வழங்கப்படும். வார அடிப்படையில் அல்லது வேலை முடிந்த 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்படும். அதில் தாமதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும். நீர்நிலை பாதுகாப்பு, கிராமப்புற உள்கட்டமைப்பு, பேரிடர் தடுப்பு உள்ளிட்ட துறைகளில் இந்த திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெறும்.
மத்திய - மாநில அரசுகள் இடையிலான செலவு பகிர்வு 60:40 என்ற விகிதத்தில் இருக்கும். வடகிழக்கு, இமயமலைத் தொடரில் உள்ள மாநிலங்களுக்கு 90:10 என்ற விகிதத்திலும், சட்டப்பேரவைகள் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு 100 சதவீத விகிதத்திலும் இருக்கும். திட்டமிடல், செயலாக்கம், கண்காணிப்பு ஆகியவற்றுக்கான அதிகாரம் ஊராட்சிகள், திட்ட அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகளிடம் இருக்கும்.
விதைப்பு, அறுவடைப் பணிகள் நடைபெறும் காலங்களில் தொழிலாளர்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்ய, ஓராண்டில் 60 நாட்கள் வரை மட்டும் திட்டம் செயல்படுத்தப்படாது. ‘2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற லட்சியத்தை அடையும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.