

மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. நாக்பூர் அடுத்த வாடி கிராமத்தில் தொண்டர்களுடன் சேர்ந்து வெற்றியை கொண்டாடிய பாஜக வேட்பாளர் தினேஷ் கோச்சி. படம்: பிடிஐ
மும்பை: மகாராஷ்டிராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. நகராட்சி கவுன்சில்களில் 286-ல் 245 இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 6,859 கவுன்சிலர் பதவிக்கான இடங்களில் 3,300 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 286 நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக 264 கவுன்சில்களில் கடந்த 2-ம் தேதியும், மற்ற கவுன்சில்களில் கடந்த 20-ம்தேதியும் தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் பாஜக, சிவசேனா (ஷிண்டே) மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி, 286 நகராட்சி கவுன்சில்களில் 245 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 75 சதவீத நகராட்சித் தலைவர்கள் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியை சேர்ந்தவர்கள். 134 நகராட்சிகளில் பாஜக வேட்பாளர்கள் தலைவர்களாக தேர்வாகியுள்ளனர்.
சிவசேனா (உத்தவ் அணி), காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (பவார் அணி) ஆகிய கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி இத்தேர்தலில் கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. எனினும், சந்திரபூர் மாவட்டம் பிரம்மபுரி நகராட்சி கவுன்சிலில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்ற 23 இடங்களில் 21 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜக, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. சாங்லி மாவட்டம் உருண் - ஈஸ்வர்பூர் நகராட்சி கவுன்சிலில் 23 தலைவர் பதவிகளை தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சி வென்றது.
3,300 பாஜக கவுன்சிலர்கள்: 6,859 கவுன்சிலர் பதவிக்கான இடங்களில் 3,300 இடங்களில் பாஜக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. சிவசேனா (ஷிண்டே) அணி 600 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) 200 இடங்களையும் வென்றுள்ளது. சிவசேனா (உத்தவ் அணி) 145 இடங்களிலும், காங்கிரஸ் 105 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) 122 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மற்ற இடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்தது.
ஒரு வாக்கில் தோல்வி: கட்சிரோலி நகராட்சி கவுன்சில் தலைவர் பதவி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீகாந்த் தேஷ்முக் 717 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சஞ்சய் மந்த்வகாடே 716 வாக்குகள் பெற்ற நிலையில், ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
தேர்தல் வெற்றி குறித்து மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளதாவது: "பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி. பிரச்சாரத்தின்போது, எந்த கட்சியையோ, தலைவரையோ நான் விமர்சிக்கவில்லை. குற்றம்சாட்டவில்லை. அரசின் வளர்ச்சித் திட்டங்கள் பற்றி மட்டுமே விளக்கினேன். நான் 100 சதவீதம் நேர்மறையாக பிரச்சாரம் செய்ததற்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர்." இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.