

சென்னை: ‘நீண்ட விடுப்பில் உள்ள நீதிபதி ஜெ.நிஷாபானு, டிச.20-ம் தேதிக்குள் கேரள உயர் நீதிமன்றத்தில் பணியில் சேர வேண்டும்’ என்று குடியரசுத் தலைவர் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது இடத்தில் பதவி வகித்து வந்த மூத்த நீதிபதி ஜெ.நிஷாபானுவை, கேரள உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல்செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்தது.
அதையேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெ.நிஷாபானுவை, கேரள உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்து
கடந்த அக்.13-ல் உத்தரவிட்டார். ஆனால் நீதிபதி ஜெ.நிஷாபானு, கேரள உயர் நீதிமன்றத்துக்கு சென்று பதவியேற்காமல் அக்.14 முதல் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி நீண்ட விடுப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு காலம் தாழ்த்தி வருவது உச்ச நீதிமன்ற கொலீஜியம், நீதித்துறை கட்டமைப்பு மற்றும் மாண்பை அவமதிக்கும் செயல் எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர் கூட்டாக இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினர்.
அதேபோல, சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள நீதிபதி நிஷாபானுவை வேண்டுமென்றே கேரள உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்து அவரை 9-வது இடத்துக்கு தள்ளியுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கமும் குற்றம்சாட்டியது. இதற்கிடையே நீதிபதி நிஷாபானு இடம்பெறாத சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் இருவர் அடங்கிய கொலீஜியம், உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும் வகையில் மாநில அரசுக்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டதாகவும், அப்போது நீதிபதி நிஷாபானு விவகாரத்தைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்தியபிறகு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து கேரள உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி ஜெ.நிஷாபானு, டிச.20-ம் தேதிக்குள் கேரள உயர் நீதிமன்றத்துக்கு சென்று பதவியேற்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி பணியிடமாற்றம் செய்யப்பட்டாலே அவரது பழைய பணியிடம் காலி ஆகிவிட்டதாக கருதப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வாலும் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். இதனால் நீதிபதி நிஷாபானு டிச.20-க்குள் கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.