

கோவை ஈஷா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவும் கலந்து கொண்டார். இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டனர். விழாவுக்கு வந்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், எல்.முருகன் ஆகியோரையும் பிரேமலதா சந்தித்துப் பேசினார்.
மேலும், சிவராத்திரி விழாவுக்குப் பிறகும் கோவையில் பிரேமலதா தங்கியிருந்தார். அப்போது, வேலுமணியை சந்தித்து பேசியதாகவும் தே.ஜ. கூட்டணியில் அவர் இணைவது உறுதியாகிவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. பிரதமர் மோடி மார்ச் 1-ம் தேதி மதுரையில் நடக்கும் தே.ஜ.கூட்டணி பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அப்போது, அதே மேடையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களோடு பிரேமலதாவும் கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய பிரேமலதா, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழக பட்ஜெட்டில் முத்தான 30 அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறியிருக்கிறார்கள். இந்த பட்ஜெட்டை முழுமையாகப் படித்துவிட்டு எனது விரிவான கருத்தைத் தெரிவிக்கிறேன். எனினும், சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் இப்போதே அமல்படுத்த முடியுமா அல்லது புதிய அரசு அமைந்த பிறகுதான் அவை நடைமுறைக்கு வருமா என்ற கேள்விகள் எழுகின்றன. தமிழகத்திற்கும், மக்களுக்கும் உண்மையான நன்மைகளைச் செய்யும் அரசாக இது இருக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு.
தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவை அறிவிப்பேன். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்ற சூழல் உருவானால் அது ஒரு நல்ல மாற்றமாக இருக்கும். வரும் தேர்தலில் மக்கள் அளிக்கப்போகும் தீர்ப்பே இறுதியானது; மக்களே எஜமானர்கள். தேர்தல் முடிவுகள் வரட்டும், அதிகாரப் பகிர்வு போன்ற சூழல் நிஜமாகவே உருவாகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கோவை ஈஷா மைய மகா சிவராத்திரி விழாவிற்கு அழைக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் முதல் வரிசையில் அமர்ந்திருந்தோம். அப்போது அங்கு வந்திருந்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், எல்.முருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் புதுச்சேரி அமைச்சர்கள் என அனைவரையும் மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்துப் பேசினேன். பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவது வரவேற்கத்தக்கதுதான். அவர் வருவதால் தமிழகத்திற்குப் பயனுள்ள நன்மைகள் நடக்கும் பட்சத்தில் அதனை வரவேற்போம். பிரதமர் வருவது தவறில்லை, அதே நேரத்தில் மக்களுக்குத் தேவையான நன்மைகள் கிடைக்க வேண்டும். இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.