

பிரேமலதா விஜயகாந்த் | கோப்புப்படம்
“தமிழகத்தில் தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருப்பதால்தான் 10 தொகுதிகளிலும் முரசு சின்னத்தில் போட்டியிடுகிறது” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அமைந்துள்ள விஜய்காந்த நினைவிடத்தில் வழிபாடு நடத்தினர். பின்னர், திமுக தலைமை அலுவலகமான அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலினிடம் பிரேமலதாவும் தேமுதிக வேட்பாளர்களும் வாழ்த்து பெற்றனர்.
செய்தியாளர்களுக்கு பிரேமலதா அளித்த பேட்டியில் கூறியதாவது: எங்கள் கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மீண்டும் ஆட்சி அமைப்பார். நாங்கள் மிக விரைவில் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறோம். அதன்பிறகு அந்தந்த தொகுதிகளுக்குச் சென்று தேர்தல் களப்பணியைத் தீவிரப்படுத்த உள்ளோம்.
கூட்டணியின் வெற்றிக்காக எங்களின் தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டு செல்வோம். வழக்கமாக அனைத்து தேர்தல்களிலும் தமிழகம் முழுவதும் நான் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்வேன். ஆனால், இந்த முறை நானே வேட்பாளராகக் களம் காண்பதாலும், தேமுதிக சார்பில் 10 வேட்பாளர்கள் போட்டியிடுவதாலும், எங்கு பிரச்சாரம் செய்வது என்பது குறித்து விரைவில் முடிவு செய்து அறிவிப்பேன்.
எங்களை அங்கீகரிக்கப்படாத கட்சி என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சொல்கிறார். தமிழகத்தில் மூன்றாவது அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேமுதிக திகழ்கிறது. அதனால்தான் 10 தொகுதிகளிலும் எங்களது சொந்த ‘முரசு’ சின்னத்திலேயே போட்டியிடுகிறோம். பிறகு, பழனிசாமி ஏன் எங்களை அங்கீகாரம் இல்லாத கட்சி என்று சொல்கிறார் எனத் தெரியவில்லை. அதற்கான பதிலை அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.