“கூட்டணி கட்சிகளும் அமைச்சரவையில் சேர வாய்ப்பு” - பிரேமலதா விஜயகாந்த் கணிப்பு

“கூட்டணி கட்சிகளும் அமைச்சரவையில் சேர வாய்ப்பு” - பிரேமலதா விஜயகாந்த் கணிப்பு
Updated on
2 min read

வரும் தேர்தல் மாறுபட்ட தேர்தலாக இருக்கும் என்றும் கூட்டணி கட்சிகளும் அமைச்சரவையில் அங்கம் வகிக்க வாய்ப்புள்ளதாகவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் மாவட்டச் செயலாளர்களிடம், யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது குறித்து ஒரு படிவம் கொடுக்கப்பட்டு, அதில் திமுக, அதிமுக, தவெக, மற்றவை என ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு அதில் ஒன்றை தேர்வு செய்து அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு சமர்பிக்க வேண்டும் என அறிவுறத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர்களின் கருத்துத் தெரிவிப்புப் படிவங்கள் ஒரு பெட்டியில் பெறப்பட்டது.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு பின் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துகளை கேட்டுள்ளோம். அவர்களின் கருத்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளின் கருத்தாக இருக்கும். தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும். ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கெனவே பேசப்பட்டது. அது ஒரு புறம் இருக்கட்டும். இப்போது நடைபெறுவது சட்டப்பேரவை தேர்தல் என்பதால் எங்களுடைய முழு கவனமும் சட்டப்பேரவை தேர்தலை நோக்கித் தான் இருக்கும்.

ஓய்வூதிய அறிவிப்பு குறித்து அரசு ஊழியர்களின் கருத்து தான் தேமுதிக-வின் கருத்து. இடைநிலை ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு அதில் கவனம் செலுத்தி அவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் புதிய அறிவிப்புகள் வெளியிடுவது இயல்பான ஒன்று தான். இவை தேர்தலுக்காகவா என்று கேட்டால் எந்த ஆட்சியாக இருந்தாலும் இது தான் நடக்கும். திமுக கொடுத்த வாக்குறுதியில் 50 சதவீதம் நிறைவேற்றி உள்ளனர், இன்னும் 50 சதவீதம் நிறைவேற்றவில்லை. சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. இந்த ஆட்சியை மதிப்பிட வேண்டியவர்கள் மக்கள் தான்.

அனைத்துக் கட்சிகளும் தேமுதிக-வுக்கு தோழமைக் கட்சிகள் தான். அனைவரும் தேமுதிக-வுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார்கள்; வரவேற்கிறார்கள். உரிய நேரத்தில் சரியான முடிவை நாங்கள் எடுப்போம். வரும் தேர்தல் ஒரு மாறுபட்ட தேர்தலாக இருக்கும், மக்கள் விரும்பும் அணி நிச்சயம் வெற்றி பெறும். ஆட்சியில் பங்கு என்ற கருத்து ஓங்கி ஒலிக்கிறது. கூட்டணி கட்சிகளும் அமைச்சரவையில் அங்கம் வகிக்க வாய்ப்பு உள்ளது.

திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைய வேண்டும் என்று பழனிசாமி கூறுகிறார். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். ஆளும் கட்சியை விமர்சிப்பது இயல்பான ஒன்று. இந்த நிமிடம் வரை எந்தக் கூட்டணியும் உறுதியாகவில்லை. தற்போது கூட்டணியில் உள்ளவர்கள் வெளியேறலாம், புதிய கட்சிகள் கூட்டணிகள் அமைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

“கூட்டணி கட்சிகளும் அமைச்சரவையில் சேர வாய்ப்பு” - பிரேமலதா விஜயகாந்த் கணிப்பு
கூட்டணி ஆட்சியா... தனித்து ஆட்சியா? - அதிமுக அணிக்கு பெ.சண்முகம் கேள்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in