

பெ.சண்முகம்
அதிமுக - பாஜக அணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியா? அல்லது அதிமுக தலைமையில் தனித்து ஆட்சியா? என்பதை விளக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித் ஷா, “வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்” என்கிறார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக, “அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என பழனிசாமி கூறியுள்ளார். இந்த லாவணி கச்சேரி நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
எனவே, அதிமுக - பாஜக அணி வரும் தேர்தலில் வெற்றிபெற்றால் கூட்டணி ஆட்சியா? அல்லது அதிமுக தலைமையில் தனித்து ஆட்சியா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அதேசமயம், தமிழகத்தில் திமுக அணியைவிட வேறு ஒரு வலுவான அணி இதுவரை உருவாகவில்லை. நரம்பில்லாத நாக்கு எதை வேண்டுமானாலும் பேசும் என்ற கூற்று சீமானுக்குப் பொருந்தும். ஒரு மாதம் பெரியாரை எதிர்த்தும், பின்னர் வரவேற்றும் பேசுவார். அதேபோல பாரதியாரை வரவேற்றும், பின்னர் எதிர்த்தும் கூட பேசுவார். எனவே, சீமானின் பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
வரும் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சிக்கான அவசியம் இருக்காது. தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும். லயோலா முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பில் முதல்வர் வேட்பாளர் பட்டியலில் விஜய் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் என்பதை நம்ப முடியவில்லை. இது கருத்துக் கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.