

தேமுதிகவின் 26 ஆம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவும் நிர்வாகிகளும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
“அமைச்சர் ராஜகண்ணப்பன் எப்படிப்பட்டவர் என தமிழக மக்களுக்கு தெரியும்” என, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரையில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், “விஜயகாந்த் இருந்தபோது தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்தது. இல்லை என்று நாம் சொல்ல முடியாது. தேமுதிக இரு கட்சிகளிடமும் கூட்டணி பேசக்கூடாது. இங்கேயும் பேசுவது, அங்கேயும் பேசுவது என்பது சரியாக வராது. விசுவாசமாக இருந்தால் ஒரு பக்கம்தான் இருக்க வேண்டும். தேமுதிக எல்லாம் ஒரு கட்சியா, பெரிய கட்சிகளை பற்றி கேளுங்கள்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று சென்னையில் ராஜகண்ணப்பன் கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்ன பிரேமலதா கூறியதாவது: நயினார் நாகேந்திரன் சொன்னதைக் கேட்டீர்களா. பழனிசாமி சொன்னதைக் கேட்டீர்களா. அமைச்சர் எ.வ.வேலு சொன்னதையும் நீங்கள் தான் செய்தியாகப் போட்டீர்கள். அவர்கள் மூன்று பேரும் தலைமையில் இருப்பவர்கள்.
அவர்களே, “நாங்கள் கூட்டணி பற்றி எதுவுமே பேசவில்லை” என்று சொல்லும்போது, உங்களிடம் இரண்டு பக்கமும் பேசுகிறார்கள் என்ற தவறான செய்தியை யார் சொல்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இதற்கு நான் பதில் சொல்வதை விட, அதற்கு உரியவர்களே பதில் கொடுத்து விட்டார்கள். இதனால் அந்தக் கேள்வியை திரும்பத் திரும்ப எங்களிடம் கேட்காதீர்கள். எங்கள் மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்கள் எதை விரும்புகிறார்களோ, அந்த கூட்டணியில் தான் தேமுதிக இணையும்.
எனவே, எப்போது கூட்டணியை அறிவிப்பீர்கள் என்ற கேள்வியை கேட்க வேண்டியவர்கள் எங்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் தான். அவர்களே கூலாக இருக்கிறார்கள்; ஹேப்பியாக, நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். தேமுதிக எங்களுடைய கட்சி. என்ன முடிவு எடுப்பது, எப்போது கூட்டணியை அறிவிப்பது என்பதைப் பற்றியெல்லாம் உரிய நேரத்தில் நாங்கள் அறிவிப்போம்.
அதனால் நீங்களும் கூலாக இருங்கள்; டென்ஷன் வேண்டாம். தேமுதிக எப்படிப்பட்ட கட்சி என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். நாங்கள் இரண்டு பக்கமும் பேசுகிறோம் என்ற கருத்தைச் சொன்னவர் (ராஜகண்ணப்பன்) எப்படிப்பட்டவர் என்பது மக்களுக்குத் தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.